காக்கி நஹி.. காவி போல்.. காவல்துறையினருக்கே சாமியார் ட்ரஸ் மாட்டி விட்ட உ.பி அரசு
லக்னோ: காசி விஸ்வநாதர் கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், சீருடைக்கு பதிலாக சாமியார்களை போன்று காவி உடை அணிந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் ஆலயம் உள்ளது. மிகவும் பிரபலமான இந்தக் கோவிலில் இந்தியாவில் இருந்து மட்டும் இன்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். கோயிலில் நாள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்...

போலீசாருக்கு சாமியார் உடை: இதனால், அங்கு பாதுகாப்பு பணியிலும் அதிக அளவில் போலீசார் ஈடுபட்டு இருப்பார்கள். இந்த நிலையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கும் ஆண், பெண் போலீசார் சீருடைக்கு பதிலாக காவி நிறத்திலான சாமியார் உடை அணிவிக்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
அகிலேஷ் யாதவ் கண்டனம்: போலீசாருக்கு சீருடைக்கு பதிலாக காவி உடை அணியவைத்து இருப்பதற்கு உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-
போலீசாருக்கான விதிகளின் படி, போலீசார் சாமியார் போன்ற உடை அணிவது சரியானதுதானா? இதுபோன்ற உத்தரவை போலீசாருக்கு வழங்கிய அதிகாரி இடை நீக்கம் செய்யப்பட வேண்டும். இதே நிலை நீடித்தால், நாளை ஏதாவது மோசடி நபர், இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் நடைபெறும்.
வேட்டி குர்தாவுடன் இருக்கும் காட்சி: அப்போது உத்தர பிரதேச அரசின் பதில் என்னவாக இருக்கும்? போலீசாருக்கு காவி உடை அணிய வைத்து இருப்பது கடும் கண்டனத்திற்கு உரியது" என்று கூறியுள்ளார். ஆண் போலீசார் வேட்டி குர்தா மற்றும் பெண் போலீசார் சல்வார் குர்தா ஆகியவை அணிந்தபடி நிற்கும் காட்சிகளையும் தனது எக்ஸ் தளத்தில் அகிலேஷ் யாதவ் பகிர்ந்துள்ளார்.
காவல் ஆணையர் விளக்கம்: எனினும், வாரணாசி காவல் ஆணையர் மோகித் அகர்வல், போலீசாருக்கு காவி உடை அணிந்து இருப்பதை நியாயப்படுத்தி பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "கோவிலில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பக்தர்களின் நலன் கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காவி உடை அணிந்து இருப்பதால், போலீசாருடன் பக்தர்கள் மோதல் போக்குடன் நடந்து கொள்ள மாட்டார்கள் என்றும் அங்குள்ள நிலைமை சீராக இருக்கும். கோவில் பாதுகாப்பு பணி என்பது பிற இடங்களை போன்றது கிடையாது. கோவிலில் மாறுபட்ட கூட்டத்தை போலீசாரால் கையாள வேண்டியிருக்கும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க வருவது இல்லை.
நிறைய வித்தியாசம் இருக்கும்: பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் செய்து கொடுக்க வேண்டும் என்பதே போலீசாரின் கடமையாக இருக்கும். போலீசார் பிடித்து தள்ளும் போது காயம் அடைந்தால் வரும் எண்ணத்திற்கும் பக்தர்களினால் தள்ளப்பட்டால் ஏற்படும் எண்ணத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். எனவே, போலீசாருக்கு சாமியார் உடை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.












Click it and Unblock the Notifications