ராகுல் காந்தி ராமர்..அவரது பாதுகையை சுமக்கும் பரதர்கள் நாங்கள்.. சல்மான் குர்ஷித் அடடே பேச்சு
லக்னோ: "ராகுல் காந்தி கடவுள் ராமரை போன்றவர்.. அவரது பாதுகையை சுமந்து செல்லும் பரதர்கள் நாங்கள்" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாஜக மற்றும் சில இந்துத்துவா அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அயோத்தியில் ராமர் கோயில் எழுப்புவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரு கட்சியின் தலைவரை அதே ராமருடன் ஒப்பிடுவது இந்து மதத்தை அவமதிக்கும் செயல் என பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வேறு மதங்களின் கடவுள்களுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு பேச காங்கிரஸாருக்கு தைரியம் இருக்கிறதா? என்றும் காங்கிரஸார் கேள்வியெழுப்பினர்.

"ராமரை போன்றவர் ராகுல்"
இதன் தொடர்ச்சியாக, சீனா - இந்தியா எல்லை மோதல் விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடியை ராகுல் காந்தி விமர்சித்திருந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வாறு ராகுல் காந்தியை மையப்படுத்தி சர்ச்சைகள் ஏற்பட்டு வரும் நிலையில், மேலும் ஒரு புது சர்ச்சையை கொளுத்தி போட்டிருக்கிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித். பாரத் ஜோடா யாத்திரை உத்தரபிரதேசத்துக்கு வரவுள்ள நிலையில், சல்மான் குர்ஷித் தலைமையிலான காங்கிரஸார் அங்கு களப்பணிகளில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் பேசுகையில், "ராகுல் காந்தி கடவுள் ராமரை போன்றவர். அவரது செயல்பாடுகளை பார்த்தாலே அது உங்களுக்கு தெரியும்.

அசாதாரண மனிதர்
ரஷ்யாவுக்கு நிகராக டெல்லியில் தற்போது பனியும், குளிரும் நிலவி வருகிறது. ஸ்வட்டரும், ஜாக்கெட்டும் அணியாமல் டெல்லியில் யாராவது நடமாட முடியுமா? ஆனால், ராகுல் காந்தி சாதாரண டி ஷர்ட்டை போட்டு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் ஒரு அசாதாரண மனிதர் என்பதற்கு இதுவே சிறந்த சான்று. மேலும், ஒரு முனிவரை போல எந்தப் பக்கமும் தனது கவனத்தை சிதறவிடாமல், தான் மேற்கொண்டிருக்கும் நடைப்பயணத்தில் மட்டுமே தனது கவனத்தை ராகுல் செலுத்தி வருகிறார்.

"காலணியை தூக்கி செல்லும் பரதர்கள்"
ராகுல் காந்தியின் நடைப்பயணத்தில் முதலில் உத்தரபிரதேசம் இல்லை. பிறகு, உத்தரபிரதேச மக்களை சந்திக்கும் ஆர்வத்தில் தனது பயணத்தை உத்தரபிரதேசத்திற்கு ராகுல் மாற்றியுள்ளார். புராண காலத்தில் ராமர் ஒரு இடத்திற்கு செல்லும் முன்பு அவரது பாதுகை அங்கு செல்லும். ராமரின் தம்பி பரதன், அந்த பாதுகையை அந்த இடங்களுக்கு சுமந்து செல்வார். அதுபோலவே, ராமரை போன்ற ராகுல் காந்தி உத்தரபிரதேசத்துக்கு வரும் முன்பு, பரதர்களை போல அவரது பயணத்திட்டங்களை சுமந்துகொண்டு நாங்கள் இங்கு வந்துள்ளோம். ராகுல் காந்தி விரைவில் இங்கு வருவார்" என சல்மான் குர்ஷித் பேசினார்.

பாஜக கண்டனம்
இந்நிலையில், சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், "ராகுல் காந்தியை கடவுள் ராமருடனும், தங்களை பரதருடனும் ஒப்பிட்டு சல்மான் குர்ஷித் பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ராகுல் காந்தியை இதுபோல வேறு மதங்களின் கடவுள்களுடன் ஒப்பிட்டு பேச சல்மான் குர்ஷித்துக்கு தைரியம் இருக்கிறதா? ராமர் வாழ்ந்ததை மறுத்த ஒரு கட்சி.. அயோத்தியில் ராமர் கோயில் எழுப்பக்கூடாது எனக் கூறிய ஒரு கட்சி.. இன்று அதே ராமருடன் தங்கள் கட்சி தலைவரை ஒப்பிட்டு பேசுகிறது. இது இந்து தர்மத்துக்கு பெரும் அவமதிப்பு ஆகும். சல்மான் குர்ஷித் பேசியதை ராகுல் காந்தியும் ஏற்கிறாரா?" என ஷேசாத் பூனாவாலா கேள்வியெழுப்பினார்.












Click it and Unblock the Notifications