உலகிலேயே அதிர்ஷ்டசாலி மனிதன் நான்தான்.. குழந்தை ராமர் சிலை வடிவமைத்த கர்நாடக சிற்பி அருண் நெகிழ்ச்சி
லக்னோ: அயோத்தியில் இன்று திறக்கப்பட்டு இருக்கும் ராமர் கோவிலுக்கான ராம் லல்லா சிலையை உருவாக்கிய கர்நாடக சிற்பி அருண் யோகிரான் இவ்வுலகிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலி தான்தான் என்று கூறி இருக்கிறார்.
அயோத்தியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ராமர் கோயிலை திறந்து வைத்தார். ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வில் மத்திய மாநில அமைச்சர்கள், பல மாநில முதலமைச்சர்கள், பாஜக பிரமுகர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் என பலர் கலந்துகொண்டார்கள். அதேபோன்று இந்த கோயில் அமைப்பதற்காக உழைத்தவர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டு பலரும் இந்த திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

இப்படி இந்த விழாவிற்கு வந்தவர்தான் அருண் யோகிராஜ். இவர் தான் ராமர் கோயிலில் வைக்கப்பட்டு உள்ள ராமர் சிலையை வடிவமைத்தவர். இவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்தார். அவர் பேசுகையில், "இப்போது நான் தான் பூமியிலேயே மிகவும் அதிர்ஷ்டசாலியான நபர் என்று உணர்கிறேன். என்னோடு எனது முன்னோர்கள், குடும்பத்தினர் மற்றும் ராமரின் ஆசீர்வாதம் எப்போதும் இருந்து உள்ளது. சில நேரங்களில் நான் ஒரு கனவு உலகத்தில் இருப்பதை போன்றே உணர்கிறேன்.” என்றார்.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ராமர் கோவிலில் 'பிராண பிரதிஷ்டை விழா நடைபெற்றது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி 11 நாட்கள் விரதம் மற்றும் கடுமையான மத சடங்குகளை கடைபிடித்து வந்தார். பிராண பிரதிஷ்டா நிகழ்வுக்கு சில நிமிடங்களுக்கு முன்பாகவே ராமர் சிலையின் இறுதி வடிவம் வெளிப்படுத்தப்பட்டது. தாமரையின் மேல் நிற்கும் ஐந்து வயது சிறுவன் போன்று ராமரின் புதிய சிலையை அருண் யோகிராஜ் வடிவமைத்து இருக்கிறார்.
51 அங்குலம் கொண்ட இந்த சிலையை அருண் யோகிராஜ் கருப்பு கல்லில் செதுக்கி இருக்கிறார். இன்று நடைபெற்ற விழாவுக்கு முன்பு ஒரு திரையால் சிலை மூடப்பட்டு இருந்தது. குழந்தை வடிவ ராமர் சிலை வடிவமைக்கும் பணி தலைசிறந்த 3 சிற்பிகளிடம் வழங்கப்பட்டு இருந்தது. இதில் அருண் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவர் குறித்து மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், “ராமர் எங்கிருக்கிறாரோ அங்கே அனுமனும் இருக்கிறார். ராமனையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதை போல், குழந்தை அனுமன் பூமியான கர்நாடகத்திலிருந்து தேர்வாகி உள்ளது.” என்றார்.












Click it and Unblock the Notifications