சமாஜ்வாதி எம்பியை கொன்றால் ரூ.25 லட்சம்.. இந்துத்துவா பிரமுகர் வீடியோ.. பின்னணியில் ஷாக்
லக்னோ: பாபரை இந்தியாவுக்கு அழைத்து வந்ததே 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ராஜ்புத் மன்னர் ராணா சங்கா தான் என்று நாடாளுமன்றத்தில் சமாஜ்வாதி எம்பி ராம்ஜி லால் சுமன் பேசியது சர்ச்சையான நிலையில் அவரை கொல்வோருக்கு ரூ.25 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று உத்தர பிரதேச மாநில இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் வீடியோ வெளியிட்டுள்ளார்.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்கு எதிர்க்கட்சியாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி செயல்பட்டு வருகிறது. இந்த சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ராம்ஜி லால் சுமன். இவர் தற்போது அந்த கட்சி சார்பில் ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.

இந்நிலையில் தான் கடந்த 21ம் தேதி ராஜ்யசபாவில் சமாஜ்வாதி எம்பி ராம்ஜி லால் சுமன் பேசினார். அப்போது அவர் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது.
அதாவது ராம்ஜி லால் சுமன் பேசும்போது,‛‛பாஜக தலைவர்கள் முஸ்லிம்களிடம் பாபரின் டிஎன்ஏ இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால் இந்திய முஸ்லிம்கள் பாபரை பெருமையாக நினைப்பது இல்லை. உண்மையில், பாபரை இந்தியாவிற்கு அழைத்து வந்தவர் யார்? இப்ராஹிம் லோடியை தோற்கடிக்க அவரை அழைத்து வந்தவர் ராணா சங்கா தான். அதன்படி முஸ்லிம்கள் பாபரின் சந்ததியினர் என்று நீங்கள் கூறினால் நீங்களும் ராணா சங்காவின் சந்ததியினர் தான். துரோகிகள். நாங்கள் பாபரை விமர்சிக்கிறோம். ஆனால் ராணா சங்காவை அல்ல'' என்றார். இது சர்ச்சையை கிளப்பியது.
இதில் ராணா சங்கா யார் என்றால் 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர். அவர் ராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்தவர். இது தான் சர்ச்சையை கிளப்பியது. இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. ராம்ஜி லால் சுமன் மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறி வருகின்றனர். ஆனால் ராம்ஜி லால் சுமன் மன்னிப்பு கோர மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த இந்து அமைப்பை சேர்ந்த மோகன் என்பவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சமாஜ்வாதி கட்சியின் எம்பியான ராம்ஜி லால் சுமனை கொலை செய்வோருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛ராஜ்புத் மன்னர் ராணா சங்காவை அவமானப்படுத்தியதை எங்களால் பொறுத்து கொள்ள முடியாது.
ராணா சங்கா தைரியமான நபர். துணிச்சல் மிக்கவர். அவரது உடலில் மொத்தம் 80 இடங்களில் காயங்கள் இருந்தது. அவர் ஒரு கை, ஒரு காலுடன் வாழ்ந்தார். ஒரு கண்ணும் அவருக்கு கிடையாது. ஆனாலும் அவர் தொடர்ந்து போர்க்களத்தில் சண்டை செய்து வந்தார். வரலாறு மற்றும் ராஜ்புத் சமுதாயத்தை பழித்து பேசுவதை எங்களால் பொறுத்து கொள்ள முடியாது. இதனால் ராம்ஜி லால் சுமனை கொலை செய்வோருக்கு ரூ.25 லட்சம் வழங்கப்படும்'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications