அழகிய நகரமாகிறது அயோத்தி.. உள்கட்டமைப்புக்கு மட்டும் ரூ.400 கோடி செலவு.. முதல்வர் யோகி அதிரடி
சுற்றுலா பயணிகளை திருப்திப்படுத்தும் வகையில் அயோத்தி நகரையே அழகாக மாற்ற உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது.
லக்னோ: அயோத்தியில் கட்டமைக்கப்பட்டு வரும் பிரம்மாண்டமான ராமர் கோயில் அடுத்த ஆண்டு திறக்கப்படவுள்ள நிலையில், அந்த நகரை அழகாகவும், பல்வேறு வசதிகளும் கொண்ட நகரமாக மாற்றும் வகையில் ரூ.400 கோடியை செலவிட உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, அங்கு கோயில் கட்டுமானப் பணிகள் வேகம் எடுத்து வருகின்றன. இதனை கவனிப்பதற்காகவே 'ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை' என்ற பிரத்யேக அமைப்பை மத்திய அரசு நிறுவியுள்ளது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகளின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்தது அயோத்தியில் ராமர் கோயில் என்பதுதான். எனவே, தற்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயில் மிக பிரம்மாண்டமாகவும், நேர்த்தியாகவும் கட்டப்பட்டு வருகிறது.

ராமர் கோயில் அமைவதால் அயோத்திக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, சுற்றுலா பயணிகளை திருப்திப்படுத்தும் வகையில் அயோத்தி நகரையே அழகாக மாற்ற உத்தரபிரதேச அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, ஏற்கனவே அயோத்தி நகரில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் பணிகளும், புதிய சாலைகளை அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள்ளன. மேலும், எந்தவொரு பகுதியில் இருந்து ராமர் கோயிலுக்கு எளிதாக வந்துவிடும் வகையிலான பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், அயோத்தி நகரை மேலும் அழகுப்படுத்தும் வகையிலான உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்ள ரூ.400 கோடியை உபி அரசு ஒதுக்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அமைச்சரவைக் குழு நேற்று வழங்கியது. அதன்படி, சுக்ரீவா கோட்டை, அஷார்பி பவன் தேவ் காளி சோட்டி, நாகேஷ்வர் தாம் உள்ளிட்ட பகுதிகளில் டைல்ஸ் அமைத்தல், ஏராளமான கழிவறைகளை கட்டுதல், பிராம்மாண்ட நுழைவாயில்களை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெறவுள்ளதாக உபி அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications