அதிகாலையில் தடம்புரண்ட சபர்மதி எக்ஸ்பிரஸ்! உத்தரப் பிரதேசத்தில் ஷாக்.. நல்வாய்ப்பாக தப்பிய பயணிகள்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிகப்பழமையான ரயில் சேவைகளில் ஒன்றான இந்திய ரயில்வே, மிகப்பெரிய நெட்வொர்க்கையும் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக நடக்கும் ரயில் விபத்துக்கள் இந்தியன் ரயில்வேக்கு ஒரு களங்கமாக மாறியிருக்கிறது. ரயில் பயணங்கள் பாதுகாப்பானது என்று நம்பியிருந்த காலம் போய், ரயில் பயணத்தில்தான் விபத்துக்கள் அதிகம் நடக்கிறது என்கிற பேச்சு தற்போது அடிப்பட தொடங்கியுள்ளது.

ஒடிசா ரயில் விபத்தில் 296 பேர் பலியாகியிருந்த சம்பவம், ஆந்திராவில் பலாசா பயணிகள் ரயில் விபத்தில் 13 பேர் உயிரிழந்தது, ஹைதராபாத் சென்ற சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் நம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது, இது தவிர ஆங்காங்கே சரக்கு ரயில்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குவது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த விவாதங்கள் ஓய்வதற்குள் கடந்த 18ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் பயணிகள் ரயில் விபத்தில் சிக்கியது.
இந்நிலையில் இன்று காலை பயணிகள் ரயில் ஒன்று விபத்தில் சிக்கியிருக்கிறது. அதாவது, அகமதாபாத்திலிருந்து, வாரணாசிக்கு செல்லும் சபர்மதி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை ஜான்சி நோக்கி சென்றுக்கொண்டிருந்தபோது தடம்புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. கான்பூர் மற்றும் பீம்சென் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்திருக்கிறது.
இந்த விபத்தில் 20 பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. உயிரிழப்புகள் ஏதும் இல்லை என்றாலும் கூட, இந்த பாதையில் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. முதற்கட்ட விசாரணையில் தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது என்றும், அதில் மோதியதால்தான் ரயில் தடம் புரண்டது எனவும் தெரிய வந்திருக்கிறது.
விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், "விபத்து நடந்த இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை, பெரிய அளவில் காயமும் ஏற்படவில்லை. எனவே பயணிகளை மீட்டு அடுத்த ரயில் நிலையத்திற்கு அனுப்பும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு, அவர்கள் சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications