கிரிமினல்களை விடாதீங்க.. தயவுதாட்சண்யமே வேண்டாம்.. உ.பி முதல்வர் யோகி அதிரடி உத்தரவு
பெரிய தாதாக்கள் மற்றும் அரசியல் செல்வாக்குமிக்க நபர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குவதாக முதல்வருக்கு தெரியவந்தது.
லக்னோ: அரசியல் செல்வாக்கு இருப்பதால் ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என அர்த்தம் கிடையாது எனக் கூறிய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், அதுபோன்ற நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
சமீபகாலமாக ரவுடிகளும், அரசியல் செல்வாக்கு மிக்கவர்களும் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் முதல்வராக பதவியேற்றதுமே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உபியில் எந்தக் குற்றச்செயல்களும் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையினருக்கு அவர் போட்ட முதல் உத்தரவாக இருந்தது. எனினும், உ.பி. மிகப்பெரிய மாநிலம் என்பதால் உடனடியாக குற்றச்செயல்களை குறைப்பது முடியாத காரியமாக இருந்தது. இதையடுத்து, ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கும் தனித்தனி போலீஸ் படையை அமைப்பது என்ற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தினார்.

அதன்படி, பெண்களை கேலி செய்பவர்களையும், பாலியல் தொல்லை அளிப்பவர்களையும் களையெடுப்பதற்காக தனிப் போலீஸ் பிரிவே உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல, ரவுடிகளை கட்டுப்படுத்தவதற்காக போலீஸில் ஒரு பிரிவினர் பணியமர்த்தப்பட்டனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் உத்தரபிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன.
மேலும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபடுவோர், 10-க்கும் மேற்பட்ட கொலை, ஆள்கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள், குழந்தைகளை பாலியல் வன்புணர்வு செய்வோர் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான கட்டிடங்களை புல்டோசர் மூலம் இடித்து தள்ளும் நடைமுறையையும் முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தினார். இதனால் வீடுகள் இடிக்கப்பட்டு விடுமே என்ற பயத்தில் குற்றச்செயல்களில் ஈடுபட ரவுடிகளும், சமூக விரோதிகளும் தயங்கி வருகின்றனர்.

இந்த சூழலில், உத்தரபிரதேசத்தில் அண்மைக்காலமாக அரசியல் செல்வாக்குமிக்க நபர்கள் அதிக அளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாக புகார்கள் காவல் நிலையங்களுக்கு அதிக அளவில் வருவதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. பெரிய தாதாக்கள் மற்றும் அரசியல் செல்வாக்குமிக்க நபர்கள் கட்டப்பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவதால் உடனடியாக நடவடிக்கை எடுக்க போலீஸார் தயங்குவதாக முதல்வருக்கு தெரியவந்தது.
இந்நிலையில், கோரக்பூரில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்துகொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த விவகாரம் குறித்து பேசினார். அவர் கூறுகையில், "மக்களுக்காகவும், மக்களின் மேம்பாட்டுக்காகவுமே ஒரு அரசாங்கம் இருக்க வேண்டுமே ஒழிய, குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக அரசாங்கம் இருக்கக்கூடாது. அரசியல் செல்வாக்கு இருப்பதால் ஒருவர் குற்றச்செயல்களில் ஈடுபடலாம் என அர்த்தமா? குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியாக சேர்ந்தவராக இருந்தாலும் போலீஸார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.












Click it and Unblock the Notifications