'நட்புக்காக..' நண்பன் உயிரிழந்த துக்கம்.. தகனம் செய்யும் போது தீயில் பாய்ந்து உயிரை விட்ட சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில் நண்பர் உயிரிழந்த சோகத்தில் அவரது உடலை தகனம் செய்யும் போது தானும் தீயில் பாய்ந்து ஒருவர் உயிரை விட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மனித உறவுகளில் மிகவும் உன்னதமான உறவுகளில் ஒன்று நட்பு.... கல்லூரி படிக்கும் போதோ.. பள்ளி பருவ காலத்திலோ.. ஏன் வேலை பார்க்கும் போதே முன் பின் தெரியாத நபர்களிடம் கிடைக்கும் அறிமுகம் நாளடைவில் நட்பாக மாறும். ஆபத்து காலத்தில் சொந்தக்காரர்களிடம் கூட உதவி கேட்க சிலர் தயங்குவார்கள். ஆனால் நண்பர்களிடம் உரிமையாக கேட்க முடியும்.

அந்த அளவுக்கு ஒவ்வொரு நபரின் வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருக்க கூடியது இந்த நட்பு.. உன்னத நட்புகள் எல்லாம் பாதியில் நின்று விடாது. பால்ய காலம் முதல் இறப்பு காலம் வரை தொடரும். அதேபோலத்தான் உத்தர பிரதேசத்தில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. என் நண்பன் கேட்டால் உயிரையும் கொடுப்பேன் என்று பலரும் வசனம் பேசுவதை கேள்வி பட்டு இருப்போம்.
ஆனால், ஆக்ராவை சேர்ந்த கவுரவ் ராஜ்புத் (வயது 42) என்பவர் தனது நண்பர் மரணத்தை கேள்வி பட்டு தானும் உயிரை துறந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது. உண்மையில் இது பாராட்டக்கூடியது இல்லை என்றாலும் நண்பர் உடல் தகனம் செய்த போது அதே தகன மேடையில் தானும் பாய்ந்து உயிரை மாய்த்து இருக்கிறார் ஆனந்த் கவுரவ் ராஜ்புத். இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-
உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்தவர் அசோக்குமார் லோதி (வயது 44). இவரும் கவுரவ் ராஜ்புத்தும் பால்ய கால நண்பர்கள். இருவரும் ஒரே நாளில் தான் திருமணமும் செய்து இருக்கிறார்கள். ஆனந்த் கவுரவிற்கு அசோக் குலார் லோதி பொருளாதார உதவிகளையும் செய்து கொடுத்து இருக்கிறார். நண்பர் கஷ்டப்படுவதை பார்த்தால் கேட்காமலேயே உதவிகளை செய்து விடுவாராம்.
இந்த நிலையில், அசோக் குமார் லோதிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், கவுரவ் ராஜ்புத் உடைந்து போனார். நண்பனுக்கு இப்படி ஒரு நோய் வந்து விட்டதே.. மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்வது என பண உதவி செய்வது என தன்னால் முடிந்த உதவிகளை செய்து வந்து இருக்கிறார். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் அசோக்குமார் லோதி சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை காலை இறந்துவிட்டார்.
உயிருக்கு உயிரான நண்பன் இறந்து விட்டானே என மீள முடியாத சோகத்தில் ஆனந்த் கவுரவ் இருந்துள்ளார். அசோக்குமார் லோதியின் உடல் யமுனை நதிக்கரையில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்கு முடியும் வரை கண்ணீருடன் அங்கேயே நின்றவர் உடலுக்கு தீ வைத்த பிறகு திடீரென தானும் தீயில் பாய்ந்துள்ளார்.
இதைப்பார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் 90 சதவிகித தீக்காயம் அடைந்த ஆனந்த் கவுரவ் உயிரிழந்தார். நண்பன் இறந்த துக்கம் தாளாமல் தானும் உயிரை மாய்த்துக் கொண்ட ஆனந்த் கவுரவின் செயல் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications