உ.பியில் பதற்றம்:அகிலேஷ் யாதவ் வீடு முன்பு போலீஸ் வாகனம் எரிப்பு-மத்திய அமைச்சர் மகன் மீது எப்.ஐ.ஆர்
லக்னோ: உ.பி. மாநிலம் லக்கிம்பூர் வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. மேலும் லக்கிம்பூர் செல்வதாக அறிவித்திருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீடு முன்பாக அவரை தடுப்பதற்காக நிறுத்தப்பட்ட போலீஸ் வாகனம் எரிக்கப்பட்டது. இதனிடையே வன்முறைக்கு காரணமாக குற்றம்சாட்டப்படும் மத்திய இணை அமைச்ச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா மீது உ.பி. போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
டெல்லி எல்லைகளில் மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக 10 மாதங்களாக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஹரியானா, உ.பி. மாநிலங்களிலும் இந்த போராட்டம் தொடருகிறது.
உ.பி.யின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மாநில பாஜக தலைவர்களின் வாகனங்களை மறித்து நேற்று கறுப்புக் கொடி காட்டினர். அப்போது மத்திய இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் வாகனம் விவசாயிகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 2 விவசாயிகள் பலியாகினர்.

உயிரிழப்பு 9 ஆக அதிகரிப்பு
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், பாஜகவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இருதரப்பு மோதலாக இது வெடித்தது. இந்த வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்திருக்கிறது. இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் உச்சகட்ட பதற்றம் நிலவுகிறது.

அகிலேஷ் வீடு முன்பு போலீஸ் குவிப்பு
லக்கிம்பூர் சென்று விவசாயிகளை சந்திக்கப் போவதாக பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து லக்கிம்பூரில் இணைய சேவை துண்டிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் செல்ல முயன்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தடுத்து நிறுத்தப்பட்டார். லக்கிம்பூருக்கு அகிலேஷ் யாதவ் செல்லக் கூடாது என்பதற்காக அவர் வீடு முன்பாக போலீசார் குவிக்கப்பட்டனர்.

அகிலேஷ் வீடு முன்பு போலீஸ் வாகனம் எரிப்பு
இதனை கேள்விப்பட்ட சமாஜ்வாதி தொண்டர்கள் அகிலேஷ் யாதவ் வீடு முன்பு பெரும் எண்ணிக்கையில் திரண்டனர். அப்போது போலீசாரின் வாகனம் ஒன்றை சமாஜ்வாதி தொண்டர்கள் தீ வைத்து எரித்தனர். இதேபோல் காங்கிரஸ், ஆம் ஆத்மி தலைவர்களின் வீடுகள் முன்பாகவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். லக்கிம்பூர் செல்லப் போவதாக சத்தீஸ்கார் முதல்வர் பூபேஷ் பாகல் அறிவித்திருந்தார். ஆனால் பூபேஷ் பாகல், உ.பி.க்கு வருவதற்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது.

மத்திய அமைச்சர் மகன் மீது வழக்கு
இதனிடையே மத்திய இணை அமைச்சர் அஜிஸ் மிஸ்ரா தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது. இந்த நிலையில் அஜிஸ் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா போலீசார் முதல்வர் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருக்கிறார். அதே நேரத்தில் விவசாயிகளின் போராட்டத்தை வன்முறைப் போராட்டமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக போராடும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications