"அப்படி மட்டும் நடந்தா ஆச்சர்யப்பட வேண்டாம்".. பெரிய சஸ்பென்ஸ் வைக்கும் சு. சாமி.. என்ன சொல்கிறார்?
லக்னோ: உத்தர பிரதேச தேர்தல் குறித்தும் ஓமிக்ரான் பரவல் குறித்தும் பாஜக மூத்த தலைவர் எம்பி சுப்பிரமணியன் சாமி செய்துள்ள ட்விட் வைரலாகி வருகிறது.
உத்தர பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் அங்கு தீவிரமாக தயாராகி வருகிறது. இதுவரை வெளியான கணிப்புகள் பாஜகவின் முதல்வர் ஆதித்யநாத்திற்கு சாதகமாக இருந்தாலும் சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ் தேர்தல் களத்தில் வேகமாக முன்னேறி வருகிறார்.
பாஜக, சமாஜ் வாதி, பகுஜன் சமாதி, காங்கிரஸ் என்ற மிகப்பெரிய நான்கு முனை போட்டி அங்கு நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் உத்தர பிரதேச தேர்தல் பற்றி பாஜக மூத்த தலைவர் எம்பி சுப்பிரமணியன் சாமி ட்விட் செய்துள்ளார்.

ஓமிக்ரான்
சமீப நாட்களாக பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்து வரும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி செய்துள்ள உ.பி தேர்தல் பற்றி செய்துள்ள ட்விட்டில், ஓமிக்ரான் பரவல் காரணமாக லாக்டவுன் போடப்பட்டு அதன் காரணமாக உத்தர பிரதேச தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால் ஆச்சர்யப்பட வேண்டாம்.

சுப்பிரமணியன் சாமி
செப்டம்பருக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு அதுவரை குடியரசுத் தலைவர் ஆட்சி கூட உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்படலாம். இந்த வருட தொடக்கத்தில் நேரடியாக எதை பாஜகவால் செய்ய முடியாமல் போனதோ அதை அடுத்த வருட தொடக்கத்தில் பாஜக மறைமுகமாக செய்யும் வாய்ப்புகள் உள்ளன என்று சுப்பிரமணியன் சஸ்பென்சாக ட்விட் செய்து உள்ளார்.

உத்தர பிரதேச தேர்தல்
அதாவது ஓமிக்ரானை காரணம் காட்டி உத்தர பிரதேசத்தில் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி வரலாம் என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இந்த வருட தொடக்கத்தில் செய்ய முடியாததை அடுத்த வருடம் பாஜக செய்யும் வாய்ப்புகள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா மரணம்
இந்த வருட தொடக்கத்தில் உத்தர பிரதேசத்தில் கொரோனா மரணங்கள் காரணமாக கங்கையில் உடல்கள் மிதந்தன. அதன்பின் ஜூன் மாதத்தில் பிரதமர் மோடிக்கும் முதல்வர் ஆதித்யநாத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் உத்தர பிரதேச முதல்வர் மாற்றப்படுகிறாரோ என்றும் கூட கேள்விகள் வந்தன. ஆட்சியில் பெரிய மாற்றங்கள் வருமா என்ற கேள்விகள், எதிர்பார்ப்புகள் எழுந்தன.

துணை முதல்வர்
அதேபோல் உத்தர பிரதேசத்தின் துணை முதல்வர்களாக மோடிக்கு நெருக்கமான கேசவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டதும் கூட ஆதித்யநாத்திற்கு எதிரான மூவாக பார்க்கப்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்த வருடம் உத்தர பிரதேசத்தில் செய்ய முடியாததை பாஜக அடுத்த வருடம் செய்ய வாய்ப்பு உள்ளதாக சுப்பிரமணியன் சாமி சஸ்பென்ஸ் கிளப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications