உ.பி. தேர்தல்: முதல்வர் யோகிக்கு எதிராக.. மக்களை ஒன்று திரட்ட போகும் விவசாயிகள்.. கலக்கத்தில் பாஜக
லக்னோ: இந்தியாவின் மிகப்பெரிய மாநிலங்களில் ஒன்றான உத்தர பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யாத் தலைமையில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடப்பதால் பல்வேறு மாநில மக்களும் இந்த தேர்தலை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது.

பாஜக தீவிரம்
ஆனால் அது அவ்வளவு சுலபமில்லை என்றே தெரிகிறது. ஏனெனில் கொரோனா தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. அங்கு மருத்துவ கட்டமைப்புகள் சரியில்லை என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி பாஜகவின் எம்.பி., எம்.எல்.ஏ.களும் சரமாரியாக குற்றம் சாட்டினார்கள்.

யோகி மீது அதிருப்தி
புண்ணிய நதியாம் கங்கையில் சடலங்கள் மிதந்தது என பல்வேறு மோசமான பாதிப்புகள் காரணமாக மக்கள் யோகி ஆதித்யநாத் மீது உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக கூறப்படுறது. பாஜக தலைமை கூட யோகி மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்தன. இதனால்தான் முதல்வர் யோகி ஆதித்யநாத் அவசரம், அவசரமாக டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.

லவ் ஜிகாத் சட்டம்
உத்தர பிரதேசத்தில் கொண்டு வரப்பட்ட லவ்ஜிகாத் சட்டம் மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. இந்த சட்டசத்தை ரத்து செய்யும்படி ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் பொங்கி எழுந்தனர். இது தவிர மாநிலத்தில் மாட்டு இறைச்சி கொண்டு சென்றதாக கூறி பலர் துன்புறுத்தப்பட்டனர். ஒரு சிலர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. வாயில்லா ஜீவனான பசுக்கள் மீது காட்டும் அக்கறையை மக்கள் மீதும் காட்ட வேண்டும் என்றும் மக்கள் நீண்ட காலமாக கூறி வருகின்றனர்.

திரும்பும் விவசாயிகள்
இவையெல்லாம் யோகிக்கு தேர்தலில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி தர அதிக வாய்ப்புள்ளது. இது தவிர மிக முக்கியமாக வேளாண் சட்டத்தை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவெடுத்துள்ளனர். டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் உ.பி.விவசாயிகளும் அதிகளவு பங்கேற்றனர். இவர்களும், பிற மாநில விவசாயிகளும் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் மக்களை திரட்ட ஆயத்தமாக இருக்கின்றனர்.

பாஜக அக்கறையின்மை
இது யோகிக்கு பெரும் பாதகமாக அமைந்துள்ளது. ராஷ்டிரிய லோக் தளம் தலைவர் ஜெயந்த் சவுத்ரியும் இதையே கூறியுள்ளார். '' போராட்டம் நடத்தும் விவசாயிகள் மீது பாஜக எடுத்து கொள்ளும் அக்கறையின்மை" உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும். பசு தொடர்பான விவகாரம், மதங்களை காட்டி மக்களை திசை திருப்புவது இனி எடுபடாது. மக்களின் வளர்ச்சி பற்றிய அக்கறையே இந்த தேர்தலில் வெல்லும்'' என்று ஜெயந்த் சவுத்ரி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications