பவாரியாஸ் கொள்ளையர்களுக்கே டஃப் கொடுத்த திருடர்கள்! 50 மீ செல்போன் டவர் அபேஸ்.. உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 50 மீ உயரம் கொண்ட செல்போன் டவரை திருடி பவாரியாஸ் கொள்ளையர்களுக்கே சிலர் டஃப் கொடுத்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கௌசாம்பி மாவட்டத்தின் உஜ்ஜையின் கிராமத்தில் உபித் உல்லா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த ஜனவரி மாதம் சுமார் 50 மீட்டர் உயரம் கொண்ட செல்போன் டவர் ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி, மார்ச் மாதம் வரை எந்த பிரச்னையும் இருக்கவில்லை. ஆனால் மார்ச் மாதம் 31ம் தேதி டவருக்கு சொந்தமான நிறுவனத்தை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக டவரை தேடி வந்திருக்கிறார்.

ஆனால் டவர் அந்த இடத்தில் இருக்கவில்லை. டவர் மட்டுமல்ல, அது இருந்ததற்கான கொஞ்சம் அடையாளம் கூட இருக்கவில்லை. சுமார் 10 ஆயிரம் கி.கி எடை கொண்ட செல்போன் டவர் அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டிருக்கிறது. டவர், அதற்கு கீழ் இருந்த உபகரணங்கள், வயர்கள் என எதுவும் கொள்ளையர்கள் மிச்சம் வைக்காமல் சுத்தமாக திருடி சென்றிருக்கின்றனர். இது தொடர்பாக இரு தினங்களுக்கு முன்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், "இந்த திருட்டு சம்பவம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்திருக்கின்றன. டவர் காணாமல் போனதாக சொல்லப்படுவது மார்ச் 31. ஆனால் எங்களுக்கு புகார் அளிக்கப்பட்டிருப்பது நவம்பர் 29. எனவே பல்வேறு கோணத்தில் நாங்கள் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.8.5 லட்சம் என்று சொல்லப்படுகிறது" என்று கூறியுள்ளனர். இது போன்று மிகப்பெரிய உலோக கட்டமைப்புகள் திருடப்படுவது இது முதல் முறை அல்ல.
சில நாட்களுக்கு முன்னர் பீகார் மாநிலத்தில் 60 அடி நீள இரும்பு பாலம் ஒன்றும் இதுபோல திருடப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரிகள் போல வேடமணிந்து வந்த சிலர், பழைய பாலத்தை உடைத்துவிட்டு புதிய பாலத்தை கட்டுவதாக கூறி ஜேசிபி கொண்டு பாலத்தை இடித்து தள்ளியிருக்கின்றனர். பின்னர் அந்த இரும்புகளை மொத்தமாக திருடி சென்றிருக்கின்றனர்.
இதற்கு முன்னர் சமஸ்திபூர் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் பந்தோல் ரயில் நிலையத்திலிருந்து அருகில் இருக்கும் சர்க்கரை ஆலைக்கு செல்லும் 2 கி.மீ நீள ரயில் தண்டவாளம் திருடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக சர்க்கரை ஆலை இயங்கவில்லை. எனவே இதனை பயன்படுத்தி கொள்ளையர்கள் தண்டவாளத்தை அபேஸ் செய்திருக்கின்றனர். இந்த திருட்டு சம்பவத்திற்கு ரயில்வே ஊழியர்களும் உடந்தையாக இருந்தனர் என்பதுதான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய விஷயமாகும். இந்த கொள்ளை சம்பவத்திற்கு முன் ஏற்கெனவே ரூ.19 லட்சம் மதிப்பிலான செல்போன் டவரும் திருடு போயுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications