புதிய மெடிக்கல் காலேஜ்.. உட்கட்டமைப்புக்கு முக்கியத்துவம்! 'யோகி 2.O'.. உ.பி மாநில பட்ஜெட்டில் அதிரடி
கவிதைகளுடன் உத்தரப் பிரதேச நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
லக்னோ: அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உத்தரப் பிரதேச அரசு இதுவரை இல்லாத அளவில் கூடுதல் நிதியுடன் பட்ஜெட்டை தாக்கல் செய்திருக்கிறது. கலாச்சாரம் பாதுகாப்பு, ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மேப்பாடு போன்றவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மறுபுறம் மாடுகளை பராமரிக்க ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற்று யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக முதலமைச்சராக தேர்வாகியுள்ளார். இந்நிலையில், இன்று ரூ.6.90 லட்சம் கோடி மதிப்பில் யோகி 2.O அரசின் இரண்டாவது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டின் மதிப்பு ரூ.6.48 லட்சம் கோடியாகும். சட்டப்பேரவையில் 'கரையிலிருந்து அலைகளை புரிந்துக்கொள்ள முயலாதீர்கள்' என்கிற கவிதை வரியுடன் நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா பட்ஜெட்டை வாசிக்க தொடங்கினார்.
இதில் ரூ.32,721 கோடிக்கு புதிய திட்டங்கள் தொடங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார். குறிப்பாக கலாச்சாரம் பாதுகாப்பு, ஏழை எளியோரின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல், உட்கட்டமைப்பு மற்றும கல்வி மேப்பாடு போன்றவற்றிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்படும் என்று பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

மருத்துவக் கல்லூரிகள்
இது குறித்து நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறுகையில், "ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்படும். ஒட்டுமொத்த சுகாதாரத்திற்கு ரூ.12,650 கோடியும், புதியதாக அமைய உள்ள 14 மருத்துவ கல்லூரிகளுக்கு ரூ.2491 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அதேபோல சாலை வசதிகளை மேம்படுத்தவும் பரவலாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இதுவரை சுமார் 60,397 கி.மீ சாலைகள் பள்ளங்களற்ற சாலைகளாக மாற்றப்பட்டுள்ளது. 14,144 கி.மீ சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதுவே 2022-2023 நிதியாண்டில் மொத்தம் 60,397 கி.மீ நீளம் கொண்ட சாலைகள் பள்ளமற்றதாக மாற்றப்படும்" என்ற கூறியுள்ளார்.

மாடுகளுக்கு ரூ.750 கோடி
தொடர்ந்து பேசிய அவர், "தெருக்களில் சுற்றி திரியும் மாடுகளை பராமரிக்க ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் இந்தியாதான் பால் உற்பத்தியில் முதன்மை வகிக்கிறது. இந்தியாவில் உத்தரப் பிரதேசம்தான் பால் உற்பத்தியில் முன்னிலை வகிக்கிறது. எனவே பால் சங்கங்களை வலுப்படுத்தி, புத்துயிர் அளிக்கும் திட்டத்துக்கு ரூ.86.95 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 'நந்த் பாபா' பால் திட்டத்தை செயல்படுத்த ரூ.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்" என்று கூறியுள்ளார். எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி பட்ஜெட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளது.

எம்.பி தொகுதி
இந்தியாவில் உள்ள மொத்த நாடாளுமன்ற தொகுதி எண்ணிக்கையில் மாநிலம் வாரியாக பார்த்தால் உத்தரப் பிரதேசத்தில்தான் அதிக எம்பி தொகுதிகள் இருக்கின்றன. இம்மாநிலத்தில் மொத்தம் 80 தொகுதிகள் இருக்கிறது. அதாவது மொத்த எம்பி தொகுதியில் இது 15.30% ஆகும். நாடாளுமன்ற தேர்தலுக்கான பரப்புரை விரைவில் தொடங்க உள்ள நிலையில் 'டபுள் என்ஜின்' அரசு குறித்து பாஜக பெருமையாக பேசி வருகிறது.

அடிக்கல்
அந்த வகையில் உத்தரப் பிரதேச பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்குவதன் மூலம் வளர்ச்சியை இரட்டிப்பாக்க முடியும் என்று பாஜக கூறி வருகிறது. இந்த பட்ஜெட் தேர்தல் பிரசாரங்களில் எதிரொலிக்கும், மட்டுமல்லாது தேர்தல் தொடங்குவதற்கு முன்னர் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படும். இந்நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடியும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications