உடம்பில் தீப்பிடித்த நிலையில்.. ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடிய உன்னாவோ பெண்.. பார்த்தவர் ஷாக் தகவல்!
23 வயது பெண்ணை 5 பேர் தீ வைத்து எரித்துள்ளனர்
லக்னோ: "பாவம் அந்த பொண்ணு.. உடம்பெல்லாம் தீப்பிடிச்சு எரிந்த நிலையில்.. உதவி கேட்டு கதறி கிட்டே ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஓடினார்" என்று உண்ணாவோ மாவட்டத்தில் பெண்ணை எரித்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சி விலகாமல் கூறுகிறார்!
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவோ மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது பெண்ணை, சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதை வீடியோவாகவும் எடுத்து வைத்து கொண்டு பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். இந்தவிவகாரம் கோர்ட் வரை சென்றது. நீதிமன்றம் தலையிட்டபிறகு, இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

கோர்ட்
இந்நிலையில் இதன் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக, பாதிக்கப்பட்ட பெண் இன்று தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், மேலும் 3 பேருடன் சேர்ந்து அந்தப் பெண்ணை தூக்கி சென்று உயிரோடு எரித்துள்ளனர்.

5 பேர்
உடம்பெல்லாம் தீ பற்றி எரிந்த நிலையில் பெண் அலறி துடிக்க.. அவரை மீட்டு உள்ளூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் லக்னோவுக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். அந்த பெண்ணுக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டுள்ளதால், ஆபத்தான நிலையில்தான் சிகிச்சை பெற்று வருகிறார்.. பெண்ணை எரித்த 5 பேரில் ஒருவன், ஏற்கனவே அதாவது போன மார்ச் மாதம் இதே பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான்.. அதற்காக ஜெயிலுக்கும் போய், ஜாமீனிலும் வந்துள்ளான்.. இதற்கு பிறகுதான் நண்பர்களை அழைத்து போய் அதே பெண்ணை சீரழித்துள்ளான்.

பலாத்காரம்
சம்பந்தப்பட்ட பெண் போலீஸாரிடம் வாக்குமூலம் தந்தபோது, "என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒருவன் ரேபரேலிக்கு அழைத்து சென்றான். அங்கு வைத்து என்னை அவன் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தான். அதன் பின்னர் 5 பேர் கொண்ட கும்பலும் பாலியல் பலாத்காரம் செய்தது. பின்னர் தீவைத்து விட்டனர்" என்றார்.

கைது
இப்போதைக்கு இதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்... மற்றவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்... அடுத்தடுத்து மாநிலங்களில் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதுடன், தீயையும் வைத்து எரிப்பது மக்களை கவலைக்கும், அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி வருகிறது.

பெட்ரோல்
இதற்கிடையே, இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர் அதிர்ச்சி விலகாமல் சொன்னதாவது: "பாவம் அந்த பொண்ணு.. பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில், உதவி கேட்டுட்டு கதறி கிட்டே ஓடினார்.. எரிந்த நிலையில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு அந்த பெண் ஓடினார். அவருக்கு பக்கத்துல நான் போனேன்.. உடனே என் கையில இருந்த செல்போனை பிடுங்கி அவரே போலீசுக்கு போன் செய்து உதவி கேட்டு கதறினார்.

பயமா இருந்தது
நீங்க யார் என்று கேட்டதற்கு, பெயரை சொன்னார்.. அந்த சமயத்துல அந்த பெண்ணை பார்க்கும்போதே எனக்கு பயமா இருந்தது.. ஏன்னா உடம்பெல்லாம் எரிந்து போய் இருந்தது.. இதுக்கப்புறம்தான் போலீசார் வந்து அவரை ஆம்புலன்ஸில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்" என்றார்.


Click it and Unblock the Notifications
