பாஜக மீது அதிருப்தி- உ.பி. சட்டசபை தேர்தலில் மாஸ் காட்ட பிராமணர்கள் வியூகம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் தங்களை ஆளும் பாஜக அரசு முற்றிலும் ஒதுக்குவதால் அக்கட்சி மீது மிக கடுமையான கோபத்தில் இருக்கின்றனர் பிராமணர்கள். தங்களது அதிருப்தியை 2022 சட்டசபை தேர்தலில் வெளிப்படுத்துவதற்கான வியூகத்தை வகுத்து வருகிறார்களாம் பிராமணர்கள்.
உத்தரப்பிரதேசத்தில் 2017 சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கே பிராமணர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களித்தனர். அமோக வெற்றியை அறுவடை செய்த பாஜக யாரும் எதிர்பார்க்காத வகையில் தாக்கூர் ஜாதியை சேர்ந்த யோகி ஆதித்யநாத்தை முதல்வராக அறிவித்தது.
கடந்த காலங்களில் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் 6 பிராமணர்கள் முதல்வராக்கப்பட்டனர். அதேபோல் பாஜகவும் செய்யும் என நினைத்த பிராமணர்களுக்கு யோகி ஆதித்யநாத்தின் தேர்வு பெரும் ஏமாற்றம்தான். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு முறையும் யோகி ஆதித்யநாத் அரசுக்கு எதிராக அதிருப்தியை பிராமணர்கள் வெளிப்படுத்தி வந்தனர்.

என்கவுண்ட்டரால் கொந்தளிப்பு
2019 லோக்சபா தேர்தலில் பிராமணர்களை சமாதானம் செய்வதற்கு பகீரத பிரயத்தனம் செய்தது பாஜக. அப்போது சற்றே சமாதானமாகி இருந்த பிராமணர்களை, தங்களது ஜாதியை சேர்ந்த நிழல் உலக தாதா விகாஸ் துபேவின் என்கவுண்ட்டர் கொந்தளிக்க வைத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக இப்போது பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக உத்தரப்பிரதேச பிராமணர்கள் திரும்பி உள்ளனர்.

பிராமணர் வாக்குகளுக்கு குறி
உத்தரப்பிரதேசத்தில் 20 கோடி மக்கள் தொகையில் பிராமணர்கள் 12%. ஒவ்வொரு தேர்தலிலும் பிராமணர்களின் வாக்குகளும் தீர்மானிக்கும் சக்தியாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு தேர்தலிலும் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வாக்குகளுக்கு குறிவைக்கும் அரசியல் கட்சிகள் அத்தனையும் இம்முறை பிராமணர்கள் வாக்குகளை வேட்டையாட களமிறங்கி உள்ளன. 2017 சட்டசபை தேர்தலில் 80% பிராமணர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

பல்க் ஓட்டு
2014, 2019 லோக்சபா தேர்தல்களில் 72%, 82% பிராமணர்கள் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்திருந்தன. பிராமணர்களைப் பொறுத்தவரை வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் ஒரே கட்சிக்கு கொண்டு சேர்த்துவிடுவார்கள். இதனால்தான் பிராமணர்களின் வாக்குகள் மிக முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸும் பிராமணர்களும்
இதனை நன்றாக உணர்ந்த காங்கிரஸ் கட்சியானது தற்போது, பாஜக அரசில் பிராமணர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்; பிராமணர்களை நாங்கள் பாதுகாப்போம்; காங்கிரஸ்தான் பிராமணர்களை முதல்வராக்கியது போன்றவற்றை முன்வைத்து வியூகங்களை வகுத்து வருகிறது. உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலிலும் பிராமணர்கள் நலனுக்காக நாங்கள் குரல் கொடுப்போம்; பிராமணர் ஒருவர்தான் முதல்வர் வேட்பாளர் என்றும் காங்கிரஸ் அறிவித்திருக்கிறது.

அதிரடி மாற்றம் வருமா?
இதேபோல் பிராமணர்கள் வணங்குகிற பரசுராமனுக்கு கோவில் கட்டுவோம் என்கின்றன சமாஜ்வாதியும் பகுஜன் சமாஜ் கட்சியும். அதேநேரத்தில் பிராமணர்கள் பகுஜன் சமாஜ் கட்சியையும் சமாஜ்வாதியையும் எப்படி ஏற்கப் போகிறார்கள்? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இருந்தபோதும் தங்களுக்கான புதிய அரசியல் சக்தி ஒன்றை தேர்வு செய்தாக வேண்டிய உத்தரப்பிரதேச பிராமணர்கள் இருக்கின்றனர். பிராமணர்கள் தேர்வாக காங்கிரஸ் இருந்தால் அது உத்தரப்பிரதேசத்தில் 2022 சட்டசபை தேர்தலில் தலைகீழ் அதிரடி மாற்றத்தை உருவாக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications