சர்வதேச தரத்துக்கு மாறும் உ.பி. பள்ளிகள்.. மாணவர்கள் திறனை மேம்படுத்த அசத்தல் திட்டம் - யோகி அதிரடி
ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை உத்தரபிரதேச அரசு எடுத்து வருகிறது
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் வகையிலான திட்டத்தை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை கல்வி, சுகாதாரம், வளர்ச்சி உள்ளிட்ட குறியீடுகளில் எப்போதுமே வட மாநிலங்கள் பின்தங்கியே இருக்கின்றன. அதிலும் உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்கள் இதில் மோசமான இடத்தில் இருக்கின்றன. இந்நிலையில், உத்தரபிரதேசத்தை அனைத்து நிலைகளிலும் முதன்மையான மாநிலமாக கொண்டு வருவோம் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அண்மையில் அறிவித்தார். அந்த வகையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளில் உ.பி. அரசு சமீபகாலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.

குறிப்பாக, உத்தரபிரதேசத்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு உபி பட்ஜெட்டில் கூட கல்விக்கும், உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் தான் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆரம்பப்பள்ளி முதல் உயர்நிலைப்பள்ளி வரை தரமான கல்வி கற்பிக்கப்படுவதை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஐடிஐ, பொறியியல் போன்ற தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, படிக்கும் போதே வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் தொழில் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமரின் ஸ்ரீ திட்டத்தின் (SHRI) உத்தரபிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை சர்வதேச தரத்துக்கு மாற்றும் நடவடிக்கையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் இறங்கியுள்ளார். அதன்படி, மாநிலத்தில் உள்ள 1753 அரசுப் பள்ளிகள் இத்திட்டத்துக்காக முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ், அந்தப் பள்ளிகளில் நவீன கல்வி முறை அமல்படுத்தப்படும். ஸ்மார்ட் வகுப்பறைகள், எளிய செயல்முறை வகுப்புகள், பாடங்களை மாணவர்கள் மனப்பாடம் செய்யாமல் அவற்றை புரிந்து படிக்கும் யுக்தி உள்ளிட்டவை இதில் செயல்படுத்தப்படும். மேலும், இதற்காக ஆசிரியர்களுக்கும் பிரத்யேக பயிற்சிகள் வழங்கப்படும் என உபி கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டத்துக்காக நடப்பாண்டு பட்ஜெட்டில் 1000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 500 கோடி ஆரம்பப் பள்ளிகளுக்கும், ரூ.500 கோடி இடைநிலைப் பள்ளிகளுக்கும் ஒதுக்கப்படவுள்ளன. இப்போது 1,753 பள்ளிகளில் செயல்படுத்தப்படும் இந்த திட்டம், பின்னர் படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் அமல்படுத்தப்படும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications