உ.பி அரசு திட்டங்களை பகிர்ந்தால் ’நெட்டிசன்களுக்கு’ ரூ.8 லட்சம்- தேசதுரோக கருத்துக்கு ஆயுள் தண்டனை!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில அரசின் திட்டங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்தால் பதிவர்களுக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அதிகபட்சம் ரூ.8 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும்; சமூக வலைதளங்களில் தேசத் துரோகக் கருத்துகளைப் பதிவிட்டால் ஆயுள் தண்டனை வழங்கப்படும் என்கிற உத்தரப்பிரதேச மாநில அரசின் டிஜிட்டல் மீடியா கொள்கைக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அமைச்சரவை அதிரடியாக ஒப்புதல் அளித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, டிஜிட்டல் மீடியா கொள்கை (பாலி) 2024 ஒன்றை உருவாக்கி உள்ளது. இந்த டிஜிட்டல் மீடியா கொள்கை 2024-க்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. சமூக வலைதளங்களான யூடியூப், எக்ஸ் பக்கம், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில் இந்த கொள்கைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசின் உ.பி.டிஜிட்டல் மீடியா கொள்கையின் அடிப்படையில், சமூக வலைதளங்களில் தேசவிரோத மற்றும் தண்டனைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டால் 3 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை தண்டனை விதிக்கப்படும்.
டிஜிட்டல் மீடியாக்களை ஒழுங்குபடுத்த V Form என்ற ஒரு கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படும். சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் வீடியோக்கள், ட்வீட்டுகள், பதிவுகள், ரீல்ஸ் ஆகியவற்றை இந்த அமைப்பு கண்காணிக்கும். இத்தகைய பதிவர்கள், சப்ஸ்கிரைபர்ஸ், பாலோயர்கள் எண்ணிக்கை அடிப்படையில் 4 கேட்டகிரிகளாக பிரிக்கப்படுவர்.
அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் வகையில் பதிவுகள், வீடியோக்கள், ட்வீட்டுகள், கருத்துகள், ரீல்ஸ்களை வெளியிடுவோருக்குரூ3 லட்சம், ரூ4 லட்சம், ரூ5 லட்சம் என மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்படும்.
யூடியூப் பதிவர்களுக்கு அதிகபட்சமாக மாதம் ரூ8 லட்சம் வரை ஊக்கத் தொகையை அரசு வழங்கும். அத்துடன் குறும்படங்கள் உள்ளிட்டவற்றை யூடியூப்பில் பதிவேற்றினால் ரூ 4 லட்சம், ரூ6 லட்சம், ரூ 7 லட்சம் மாத ஊக்கத் தொகையாகவும் உத்தரப்பிரதேச மாநில அரசு வழங்கும்.
உத்தரப்பிரதேச மாநிலத்தவர்தான் என்றில்லாமல் அனைத்து சமூக வலைதளப் பதிவர்களுக்கும் இத்தகைய ஊக்கத் தொகை பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications