விஷ ஊசி என வதந்தி.. கொரோனா தடுப்பூசி போட மறுத்து சரயு ஆற்றில் குதித்த உ.பி. கிராமத்தினர்!
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போடச் சென்ற அதிகாரிகளை விஷ ஊசி போட வந்ததாக கருதிய கிராமத்தினர் சிலர் சரயு ஆற்றில் குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. இந்த நிலையில் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தி வருகிறார்கள்.
அது போல் கொரோனா தடுப்பூசி ஒன்றே கொரோனா சங்கிலியை உடைப்பதற்கான தீர்வு என்றும் கூறி வருகிறார்கள்.

கோவிஷீல்டு
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அனைவரும் தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளன. ஆனால் மக்களோ தடுப்பூசி போட அச்சப்படுகிறார்கள்.

பரவல்
தானாக வராமல் கொரோனாவை பரப்புகிறார்களே என நினைத்து அரசு சுகாதாரத் துறை அதிகாரிகளே கிராமம் கிராமமாக சென்றால் அவர்களுடன் கிராமத்தினர் சண்டையிட்டு அவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள். மேலும் சிலர் கற்களை வீசுவது, கம்பால் அடிப்பது போன்ற காரியங்களில் இறங்குகிறார்கள்.

கிராமம்
உத்தரப்பிரதேசத்தில் ஒரு கிராமத்தில் மக்கள் செய்த செயல் மிகவும் வித்தியாசமாக இருந்தது. பராபங்கி மாவட்டத்தில் உள்ள சிசார்ஹா கிராமத்திற்கு கொரோனா தடுப்பூசி போட சுகாதாரத் துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது மக்கள் அவர்களை முன்னேறிச் செல்ல விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

விஷ ஊசி
ஒரு கட்டத்தில் ராம்நகரின் சார் ஆட்சியர் ராஜீவ் குமார் சுக்லா கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம், 18 வயதினருக்கு மேல் உள்ள அனைவரும் தடுப்பூசி கட்டாயம் என தெரிவித்தார். ஆனால் மக்களோ இதை ஏற்காமல் சரயு ஆற்றில் குதித்தனர். இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், சுகாதாரத் துறை அதிகாரிகள் எங்களுக்கு விஷ ஊசி போட வந்துள்ளனர் என சிலர் தகவல் தெரிவித்ததால் நாங்கள் ஆற்றில் குதித்தோம் என தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications