ராஜ்நாத் மகனுக்கு பிரச்சாரம் செய்ய வந்த பாஜக எம்பி.. செருப்பை தூக்கி காட்டிய மக்கள்.. உ.பியில் பரபர
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பாஜக எம்வி மனோஜ் திவாரி பிரச்சாரம் செய்ய சென்ற போது அவருக்கு எதிராக பொது மக்கள் செருப்பை தூக்கி காட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக செய்யும் பிரச்சாரங்களை அங்கு இருக்கும் பொது மக்கள் பலர் எதிர்த்து வருகிறார்கள். பாஜக நிர்வாகிகள் பிரச்சாரம் செய்ய செல்லும் போது பொது மக்கள் அவர்களை விரட்டி அடிக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. முசாபர்நகரில் உள்ள கட்டௌலி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனி அங்கு பிரச்சாரம் செய்ய சென்ற போது பொது மக்கள் மூலம் விரட்டி அடிக்கப்பட்டார்.
ஜாட் பிரிவினரும், இஸ்லாமியர்களும் இணைந்து பாஜக எம்.எல்.ஏ விக்ரம் சிங் சைனியை விரட்டி அடித்தனர். இதேபோல் வேறு சில இடங்களிலும் பாஜக எம்எல்ஏக்கள் பொதுமக்கள் மூலம் விரட்டி அடிக்கப்பட்டு உள்ளனர்.

போராட்டம்
இந்த நிலையில்தான் நொய்டாவிலும் இதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவில் பாஜக சார்பாக பிரச்சாரம் செய்ய நேற்று பாஜக எம்பி மனோஜ் திவாரி சென்று இருந்தார். நொய்டாவின் தற்போதைய பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் பங்கஜ் சிங். இவர் உத்தர பிரதேச மாநில பாஜக பொதுச்செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகன் ஆவார்.

பாஜக எம்எல்ஏ
இவர் மீண்டும் நொய்டாவில் பாஜக சார்பாக களமிறக்கப்பட்டு உள்ளார். பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய பாஜக எம்பி மனோஜ் திவாரி சென்று இருக்கிறார். வடகிழக்கு டெல்லியின் எம்பி இவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்பு சமாஜ்வாதி கட்சியில் இருந்த மனோஜ் திவாரி கோரக்பூர் தொகுதியில் 2009ல் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்து லோக்சபா தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின் பாஜகவில் இணைந்து 2014ல் இருந்து வடகிழக்கு டெல்லி எம்பியாக இவர் இருக்கிறார்.

பாஜக பிரச்சாரம்
இந்த நிலையில் பங்கஜ் சிங்கிற்கு ஆதரவாக மனோஜ் திவாரி நொய்டாவில் பிரச்சாரம் செய்ய சென்றார். அப்போது அங்கு இருந்த போது மக்கள் மொத்தமாக கூடி மனோஜ் திவாரிக்கு எதிராக குரல் கொடுத்தனர். பாஜகவிற்கு எதிராக கடுமையான கோஷங்களை எழுப்பினர். பாஜக உள்ளே வர கூடாது. வெளியே செல்லுங்கள்.. இங்கே பிரச்சாரம் செய்ய கூடாது.. உங்களை அனுமதிக்க மாட்டோம் என்று அப்போது மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள்.

உத்தர பிரதேச தேர்தல்
முக்கியமாக பெண்கள் பலர் அங்கு கூடி இருந்தனர். மனோஜ் திவாரியை உள்ளே விடாமல் அங்கே பெண்கள் சூழ்ந்து நின்றனர். அதோடு எம்பி மனோஜ் திவாரிக்கு எதிராக அங்கு இருந்த மக்கள் செருப்பை தூக்கி காட்டியதும் சர்ச்சையாகி உள்ளது. நொய்டாவில் உள்ள செக்டர் 17 என்ற தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

எம்பி மனோஜ் திவாரி
தலித் மக்களுக்கு பாஜக ஒன்றும் செய்யவில்லை.. அவர்கள் உள்ளே வர கூடாது என்று மக்கள் கோஷம் எழுப்பினர். அதோடு அங்கு இருந்த மக்கள் அகிலேஷ் யாதவ் ஜிந்தாபாத் என்றும் கோஷம் எழுப்பினர். அங்கு வீடு வீடாக பிரச்சாரம் செய்வதற்காக மனோஜ் திவாரி சென்று இருந்தார். ஆனால் அங்கு மக்கள் அவரை உள்ளே விடாத காரணத்தால் அங்கிருந்து உடனே மனோஜ் திவாரி வெளியேறினார். இதையடுத்து அருகில் இருந்த மற்ற செக்டர் பகுதிகளில் மனோஜ் திவாரி பிரச்சாரம் செய்தார்.












Click it and Unblock the Notifications