திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
லக்னோ: பிரபல தாதாவாக இருந்து அரசியல்வாதியாக மாறி ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்ட முக்தார் அன்சாரி நெஞ்சுவலி காரணமாக பாண்டா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று இறந்தார்.
உத்தர பிரதேச மாநிலம் மெள பகுதியை சேர்ந்தவர் முக்தார் அன்சாரி. வயது 63. இவர் பிரபல தாதாவாக வலம் வந்தார். அடிதடி, கொலை மிரட்டல், கொலை உள்பட ஏராளமான வழக்குகள் இவர் மீது பதிவு செய்யப்பட்டன.
முக்தார் அன்சாரி மீது மொத்தம் 61 வழக்குகள் உள்ளன. இதில் 15 வழக்குகள் கொலை வழக்குகளாகும். இவர் கடந்த 1980ல் இருந்து குற்ற செயல்களில் ஈடுபட தொடங்கினார்.

தொடக்கத்தில் பிரபல ரவுடி கும்பலுடன் சேர்ந்து அவர் செயல்பட தொடங்கினார். அதன்பிறகு 1990ல் முக்தார் அன்சாரி தாதாவாக மாறினார். அவர் தலைமையில் ரவுடிகள் தனி கும்பலாக செயல்பட்டனர். முக்தார் அன்சாரி தலைமையிலான கும்பல் உத்தர பிரதேசத்தின் மெள, காசிப்பூர், வாரணாசி, ஜான்பூர் மாவட்டங்களில் கடத்தல், பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றங்களை செய்து வந்தார்.
அதன்பிறகு அவர் அரசியலுக்குள் நுழைந்தார். உத்தர பிரதேச மாநிலம் மொள சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு 5 முறை வெற்றி பெற்றார்.இந்த தொகுதியில் 1996, 2002, 2007 ஆகிய ஆண்டுகளில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார். அதன்பிறகு 2012ல் குவாமி ஏக்தா தளம் கட்சியில் போட்டியிட்டு வென்றார். பிறகு 2017 ல் பகுஜன் சமாஜ் கட்சியில் களமிறங்கி வெற்றி பெற்றார்.
பாஜக எம்எல்ஏ கிருஷ்ண ஆனந்த் ராய் கொலை வழக்கில் கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முக்தார் அன்சாரிக்கு நீதிமன்றம் 10 ஆண்டு சிறை விதித்தது. மேலும் போலியாக துப்பாக்கி உரிமம் வைத்திருந்த வழக்கில் ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது. மொத்தம் 8 வழக்குகளில் தண்டனை அறிவிக்கப்பட்ட நிலையில் பாண்டா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் தான் இன்று திடீரென்று அவர் சிறையில் மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு ராணி துர்காவாதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 9 டாக்டர்கள் அடங்கிய குழு பரிசோதனை மேற்கொண்டது. நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் மயங்கியது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி முக்தார் அன்சாரி இரவில் உயிரிழந்தார். இந்த விபரம் மருத்துவனை அறிக்கையில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
முக்தார் அன்சாரி உயிரிழப்பால் மெள பகுதியில் பதற்றமான சூழல் உள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு அசம்பாவிதங்களை தடுக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் முக்தார் அன்சாரியின் உடல் உள்ள மருத்துவமனையிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக கடந்த 26 ம் தேதி முக்தார் அன்சாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 14 மணிநேரம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். அந்த சமயத்தில் முக்தார் அன்சாரியின் சகோதரரரும் காசிப்பூர் தொகுதி எம்பியுமான அப்சல் அன்சாரி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அதாவது தனது சகோதரர் முக்தார் அன்சாரிக்கு உணவில் ‛ஸ்லோ பாய்சன்' கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்த ‛ஸ்லோ பாய்சன்' 40 நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. மேலும் கடந்த மார்ச் 19 அல்லது மார்ச் 22ம் தேதி மீண்டும் ‛ஸ்லோ பாய்சன்' சிறையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தான் முக்தார் அன்சாரியின் உடல்நலம் மோசமானதாக அவர் தெரிவித்தார். இத்தகைய சூழலில் தான் நெஞ்சுவலியால் இன்று முக்தார் அன்சாரி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications