‛அமித்ஷா’ போல் நடித்து.. மாஜி எம்எல்ஏவுக்கு விபூதியடிக்க முயன்றவர் கைது.. ஷாக்கில் உத்தர பிரதேசம்!
லக்னோ: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா போல் நடித்து உத்தர பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயன்ற நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். அவர் யார்? அமித்ஷா போல் நடித்து எப்படி பணம் பறிக்க முயன்றார்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் உள்ளார். இங்குள்ள பார்கேரா சட்டசபை தொகுதியின் முன்னாள் பாஜக எம்எல்ஏ கிஷான்லால் ராஜ்பூட்.

இந்நிலையில் தான் கடந்த 4ம் தேதி அவருக்கு செல்போனில் அழைப்பு வந்தது. அதனை எடுத்து அவர் பேசியபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது எதிர்முனையில் பேசிய நபர், ‛‛நான் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகிறேன்'' என கூறியுள்ளார். இதை கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்த அவர் மிகவும் பணிவுடன் பேசியுள்ளார். அப்போது ‛‛வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தருகிறேன். இதற்காக எனக்கு பணம் கொடுக்க வேண்டும்'' என கூறியுள்ளார். அதேபோல் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை 9 முறை போன் செய்து அவரிடம் பணம் கேட்கப்பட்டது.
இதனால் அவருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவர் சார்பில் நாவாப்கஞ்ச் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணையின்போது திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது. அழைப்பு வந்த செல்போன் எண்ணை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிம் கார்டு கடந்த டிசம்பர் மாதம் 29ம் தேதி ஹரீஸ் என்பவர் பெயரில் வாங்கியதும், அவர் சமுகா கிராமத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து ஹரீசை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அந்த சிம் கார்டு ரவீந்திர மவுரியா என்பவர் பயன்படுத்தியது தெரியவந்தது. ரவீந்திர மவுரியாவை போலீஸ் நிலையம் வரவழைத்து விசாரித்தனர். அப்போது அவர் தன்னிடம் சிம் கார்டு இல்லை எனக்கூறி குற்றத்தை மறுத்துள்ளார். அதன்பிறகு அவர் அந்த சிம் கார்டை உடைத்து எறிந்துள்ளார்.
இதுபற்றி அறிந்த போலீசார் சிம்கார்டை உடைத்தது ஏன்? என்பது பற்றி விசாரித்தபோது ரவீந்திர மவுரியா தான் அமித்ஷா போல் நடித்து முன்னாள் எம்எல்ஏவிடம் பணம் பறிக்க முயன்றதும் புரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ரவீந்திர மவுரியா தனது நண்பர் ஷாகீத் என்பவருடன் சேர்ந்து இந்த மோசடிக்கு திட்டமிட்டுள்ளது தெரியவந்தது. ஷாகீத் தற்போது தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதுபற்றி எஸ்பி முகேஷ் மிஸ்ரா கூறுகையில், ‛‛ஷாகீத் மற்றும் ரவீந்திர மவுரியா ஆகியோர் மீது கொள்ளை, மோசடி, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவுளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மோசடி செய்வதற்காக ட்ரூ காலர் செயலியில் தேவநாகரி (கிராக் மந்திராலயா டெல்லி, கேந்திர சர்க்கார்) என பதிவு செய்துள்ளார். அதாவது டெல்லி பாஜக அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறியதை மற்றவர்கள் நம்புவதற்காக இப்படி செய்துள்ளார். இந்த கும்பல் அரசியல்வாதிகளை குறிவைத்து இத்தகைய மோசடிகளை அரங்கேற்றி உள்ளது. குறிப்பாக ஷாகீத் இதற்கு முன்பும் இப்படியொரு மோசடியில் ஈடுபட்டுள்ளார். அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications