மாசில்லா உத்தரப் பிரதேசம்! பசுமை ஹைட்ரன் உற்பத்தி கொள்கை வரைவு அறிக்கையை தயார் செய்யும் பாஜக அரசு
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை-2023க்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைக்கவும், காலநிலைமாற்றத்திற்கு காரணமாக படிம எரிபொருளை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனவே 'பசுமை ஹைட்ரஜன்' உற்பத்தி மையத்தை அம்மாநில அரசு அமைக்க இங்கிலாந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ரூ.16,000 கோடி முதலீட்டில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி யைம் உத்தரப் பிரதேசத்தில் உருவாகி வருகிறது. இதன் மூலம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் படி எரிபொருளான பெட்ரோல், டீசல் போன்றவைக்கு பதில் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும். இதனால் காற்று மாசு குறைந்து உலகம் வெப்பமயமாதல் தடுக்கப்படும். எனவே பசுமை ஹைட்ரஜனில் மாநில அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தின் பசுமை ஹைட்ரஜன் கொள்கை-2023க்கான வரைவு அறிக்கையை தயார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது. உத்தரபிரதேசத்தில், பல ஆறுகள் உள்ளன. இதைப் பயன்படுத்தி, நாட்டிலேயே மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியாளராக உ.பியை மாற்றலாம். எனவே மத்திய அரசின் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி திட்டத்தை கூர்ந்து கவனித்து அதன் அடிப்படையில் மாநிலத்திற்கும் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

மாநில நீர்ப்பாசனத் துறையுடன் ஒருங்கிணைந்து, உ.பி முழுவதும் உள்ள சிறிய மற்றும் பெரிய ஆறுகளின் அருகே நீர் இருப்புக்களை உருவாக்கவும், மழைநீரைப் பயன்படுத்தி பசுமை ஹைட்ரஜனை உற்பத்தி செய்யவும் உத்தரவிட்டிருக்கிறேன். அதேபோல பசுமை ஹைட்ரஜன் ஆற்றலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மிகப்பெரிய ஊக்கத்தொகைகளை வழங்குவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டன" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications