1 கோடி பேருக்கு இலவச ஸ்மார்ட் போன்,டேப்லெட் தரும் யோகி அரசு - ஆட்சியைத் தக்கவைக்க ஆயத்தம்
உத்தரபிரதேச மாநிலத்தில் மாணவ மாணவிகளுக்கு ஒருகோடி இலவச ஸ்மார்ட்போன், டேப்லெட் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று தொடக்கி வைக்கிறார்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாணவ மாணவிகளுக்கு ஒரு கோடி இலவச டேப்லெட், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இன்று தொடக்கி வைக்கிறார். சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இளைஞர்களைக் கவரும் வகையில் இலவச லேப்டாப் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார் யோகி ஆதித்யாநாத்.
உத்தரப்பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. யோகி ஆதித்யாநாத் முதல்வராக உள்ளார். ஆட்சியைத் தக்கவைக்க பாஜக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

உத்தரபிரதேச தேர்தலில் தனித்து போட்டியிட்டு பலத்தை நிரூபிக்க காங்கிரஸ் கட்சியும் களத்தில் குதித்துள்ளது.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, கல்லூரி மாணவிகளுக்கு செல்போன், ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் யோகி ஆதித்யநாத், கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒருகோடி லேப்லேட், ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 97-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஒரு கோடி இளைஞர்களுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகளை அம்மாநில அரசு இன்று வழங்குகிறது. இதற்காக அம்மாநிலம் முழுவதும் உள்ள தகுதி வாய்ந்த மாணவ, மாணவிகள் அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் திறன் மேம்பாடு ஆகிய படிப்புகளில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு இன்று ஸ்மார்ட்போன்களையும், டேப்லெட்டுகளையும் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வழங்க இருக்கிறார். இந்த திட்டத்திற்காக முதற்கட்டமாக 60 ஆயிரம் ஸ்மார்ட்போன்களும், 40 ஆயிரம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட்டுள்ளன.
இதற்காக முதல் கட்டமாக ரூ.2,035 கோடி செலவிடப்பட்டுள்ளது. தலா ரூ.10,740 விலையில் 10.50 லட்சம் செல்போன்களும், தலா ரூ.12,606 விலையில் 7.2 லட்சம் டேப்லெட்டுகளும் வாங்கப்பட்டு உள்ளன. ஐ.டிஐ., டிப்ளமோ, இளநிலை, முதுநிலை பட்டப்படிப்பு, பொறியியல் இறுதி ஆண்டு படிப்பு, மருத்துவ உயர்கல்வி இறுதியாண்டு, பி.டெக், எம்.டெக் உள்ளிட்ட படிப்புகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த திட்டத்தால் பலன் பெறுவார்கள்.












Click it and Unblock the Notifications