காதல் திருமணம் செய்வோர் போலீஸ் பாதுகாப்பு கோர முடியாதா? அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பின் விரிவான விளக்கம்
லக்னோ: பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராகத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் போலீஸ் பாதுகாப்பை ஒரு உரிமையாகக் கோர முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்திருந்தது. அதேநேரம் காதல் திருமணம் செய்த யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று இதற்கு அர்த்தம் இல்லை. மேலும், யார் எல்லாம் பாதுகாப்பு கோரலாம் என்பது குறித்தும் அலகாபாத் உயர் நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது.
நமது நாட்டில் பெரும்பாலும் பெற்றோரே தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து வைக்கிறார்கள். அதேநேரம் காதல் திருமணம் செய்து கொள்ளும் போக்கு மெல்ல அதிகரித்தே வருகிறது. இருப்பினும், பல நேரங்களில் காதல் திருமணங்களுக்குப் பெற்றோர் ஒப்புக்கொள்வது இல்லை. பெற்றோர் எதிர்ப்பை மீறியே காதல் ஜோடிகள் திருமணம் செய்ய வேண்டி இருக்கிறது.

அலகாபாத் ஐகோர்ட்
இதுபோல பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்யும் காதல் ஜோடிகள், பெற்றோரால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக் கருதி போலீஸ் பாதுகாப்பு கோருவார்கள். அப்படித் தான் உத்தரப் பிரதேசத்தில் காதல் ஜோடி ஒன்று போலீஸ் பாதுகாப்பு கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், போலீஸ் பாதுகாப்பைக் கோருவது உரிமை இல்லை எனத் தெரிவித்துள்ளது.
அதாவது தகுதியான வழக்கில் தம்பதியினருக்குப் பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட முடியும் எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஆனால் எந்த அச்சுறுத்தல் எதுவும் இல்லாத போது பாதுகாப்பு தர முடியாது என்றும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும் சமூகத்தை எதிர்கொள்ளவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பின்னணி என்ன
ஷ்ரேயா கேசர்வானி என்ற பெண்ணும் அவரது கணவரும் போலீஸ் பாதுகாப்பு கோரியும், தங்கள் அமைதியான திருமண வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்று உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் ஐகோர்ட் நீதிபதி சௌரப் ஸ்ரீவாஸ்தவா இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார். அவர்களின் மனுவில் கூறிய பாயிண்டுகளை ஆராய்ந்த உயர் நீதிமன்றம், மனுதாரர்களுக்கு எந்தவொரு கடுமையான அச்சுறுத்தலும் இல்லை என்பதைக் குறிப்பிட்டு, ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.
மேலும் நீதிபதி கூறுகையில், "லதா சிங் vs உத்தரப் பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது நீதிமன்றங்களின் நோக்கமல்ல.
ஆதாரம் இல்லை
இந்த வழக்கில் மனுதாரர்களின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து உள்ளது என்பதற்கு எந்தவொரு ஆதாரமோ அல்லது காரணமோ இல்லை. மனுதாரர்களில் உறவினர்கள் இவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவே தாக்கக்கூடும் என்பதற்கு ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை. மேலும், உறவினர்கள் தங்களை மிரட்டினர் என்பது குறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தை அணுகி புகார் அளித்தனரா என்பது குறித்த விவரங்களும் இல்லை" என்றார்.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே சித்ரகூட் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் மனு அளித்திருப்பதாகத் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, "அப்போது சம்பந்தப்பட்ட போலீசார் அந்த மனுவை ஆராய்ந்து உண்மையான அச்சுறுத்தல் இருப்பதாக உணரப்பட்டால், தேவையானதைச் செய்வார்கள்" என்றார்.
யார் பாதுகாப்பு கோரலாம்
காதல் திருமணம் செய்தவர்கள் போலீஸ் பாதுகாப்பை உரிமையாகக் கோர முடியாது என்று கூறி அந்த மனுவைத் தள்ளுபடி செய்தது. அதேநேரம் யாராவது தவறாக நடந்து கொண்டாலோ அல்லது அவர்களைத் துன்புறுத்தினால், நீதிமன்றங்களும் போலீசாரும் அவர்களைக் காப்பாற்ற முன்வருவார்கள் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.












Click it and Unblock the Notifications