அரசாங்கத்தை விட பாஜக முக்கியம்.. உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு 'வில்லனாக' மாறிய மவுரியா யார்?
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக துணை முதல்வரும் பாஜக முன்னாள் மாநில தலைவருமான கேசவ் பிரசாத் மவுரியா பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அரசாங்கத்தை விட கட்சிதான் முக்கியம்; நான் முதலில் பாஜகவின் தொண்டர்தான்.. அப்புறம்தான் துணை முதல்வர் என கேசவ் பிரசாத் மவுரியா சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பதும் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய பின்னடைவை சந்தித்தது. உ.பி.யில் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணி 43 இடங்களைக் கைப்பற்றியது. பாஜக கூட்டணியால் 36 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. இது பாஜகவுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

யோகி ஆதித்யநாத் மீது அதிருப்தி: உ.பி.யில் பாஜக பின்னடைவு தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பாஜக எம்.எல்.ஏக்கள் பலரும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அதீத தன்னம்பிக்கையே இவ்வளவு பெரிய தோல்விக்குக் காரணம் என்றனர். யோகி ஆதித்யநாத்துக்கு எதிரான பாஜக எம்.எல்.ஏக்கள் , துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா தலைமையில் இனி வரும் தேர்தல்களை சந்திக்க வேண்டும் எனவும் குரல் கொடுத்து வருகின்றனர்.
டெல்லியில் மவுரியா: இந்த நிலையில்தான் டெல்லி சென்ற கேசவ் பிரசாத் மவுரியா, பாஜக தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதனையடுத்து உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மாற்றப்படலாம் அல்லது உ.பி. பாஜக தலைவர் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. பாஜகவின் பிரதமர் வேட்பாளராகக் கூடும் என முன்னிறுத்தப்பட்ட யோகி ஆதித்யநாத்துக்கு வலிமையான வில்லனாக உருவெடுத்திருக்கிறார் கேசவ் பிரசாத் மவுரியா. யார் இந்த கேசவ் பிரசாத் மவுரியா?
பாஜகவின் ஓபிசி முகம்: உத்தரப்பிரதேச அரசியல் களத்தில் யோகி ஆதித்யநாத் பேசப்படுவதற்கு முன்னரே அதிகமாக உச்சரிக்கப்பட்ட பெயர்தான் கேசவ் பிரசாத் மவுரியா. உ.பி.யில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் பாஜகவை ஆட்சியில் அமர்த்தியவர் இந்த கேசவ் பிரசாத் மவுரியா. பல ஆண்டுகள் ஆர்.எஸ்.எஸ்- விஹெச்பி- பாஜகவுடன் இணைந்து பயணித்தவர். அயோத்தி ராமஜென்ம பூமி இயக்கம்- அதாவது பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் முக்கியப் பங்காற்றியவர். உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் இதர பிற்படுத்தப்பட்டோர் முகமாக அறியப்பட்டவர் கேசவ் பிரசாத் மவுரியா.
சட்டசபை, லோக்சபா தேர்தல்கள்: 2002, 2007, 2012 சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட மவுரியா 2012-ல் மட்டுமே வெற்றி பெற்றார். 2014-ல் லோக்சபா தேர்தலில் அபார வெற்றியும் பெற்றார். 2016-ம் ஆண்டு உ.பி. மாநில பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 2017-ம் ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் பாஜக பிரம்மாண்ட வெற்றி பெற்றது. 14 ஆண்டுகளுக்குப் பின்னர் உ.பி.யில் பாஜக ஆட்சியைக் கைப்பற்ற காரணமானவர் கேசவ் பிரசாத் மவுரியா. அப்போது முதல் முறையாக துணை முதல்வரானார்.
முதல்வர் கனவு: 2022-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக மீண்டும் வென்ற போது முதல்வர் பதவியை மிகவும் எதிர்பார்த்தவர் கேசவ் பிரசாத் மவுரியா. ஆனால் ஆர்.எஸ்.எஸ். தலையீட்டில் யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார். இதனால் கேசவ் பிரசாத் மவுரியா மீண்டும் துணை முதல்வராக்கப்பட்டார். தற்போதைய மவுரியாவின் கலகக் குரலானது 2027 சட்டசபை தேர்தலை மையமாக கொண்டிருந்தாலும் யோகி ஆதித்யநாத்தின் முதல்வர் பதவிக்கான குறிதான் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications