'அசுர வேகம்' டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி.. யோகியின் உத்தரப் பிரதேச மாநில அரசு பெருமிதம்
உத்தரப் பிரதேசத்தில் 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசு வேலை வழங்கப்படும் என யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 500 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. தேசிய அளவில் அதிக நாடாளுமன்ற தொகுதிகளை கொண்டிருக்கும் மாநிலம் உத்தரப் பிரதேசம்தான். ஏற்கெனவே இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநிலத்தை பாஜக கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்க உத்தரப் பிரதேசத்தின் அனைத்து தொகுதிகளையும் பாஜக தன்வசப்படுத்த முயன்று வருகிறது.

அதற்கான பணிகள் இந்த ஆண்டு தொடக்கம் முதல் தீவிரமடைந்து வருகின்றன. இந்த பணிகளின் ஒரு அங்கம்தான் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இருப்பினும் இதற்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தின் முதலீட்டாளர்கள் மாநாடுகள் அனைத்தும் மும்பை அல்லது டெல்லியில்தான் நடத்தப்படும். ஆனால், இந்த முறை மாநாடு லக்னோவில் நடைபெற்றுள்ளது. முதலீட்டாளர்களை லக்னோ வரை கொண்டு வந்த பெருமை பாஜகவுக்குதான் சேரும்.
அதே நேரத்தில் பட்ஜெட் விஷயத்தில் உட்கட்டமைப்பு வளர்ச்சி, கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றிற்கு யோகி ஆதித்யநாத் தலைமையிலான 'டபுள் எஞ்ஜின் அரசு' அதிக முக்கியத்துவம் கொடுத்திருப்பதாக நிதியமைச்சர் சுரேஷ் கண்ணா கூறியிருந்தார். அடுத்தடுத்த அறிவிப்புகள், அதற்கான நிதி ஆதாரம், புதிய திட்டங்கள் என பாஜக அரசு தீவிரமாக செயல்படத் தொடங்கியிருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு என்பதுதான் இந்த அறிவிப்பு. நேற்று (மார்ச் 21) லக்னோவின் பிஏசி மைதானத்தில் 71வது அகில இந்திய காவல்துறை தடகள கிளஸ்டர் சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
இந்த போட்டியில் விளையாட்டு வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் இப்போட்டியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத் விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். அதாவது 500க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு காவல்துறை மற்றும் இதர நிர்வாக துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பிரதமர் மோடி ஆட்சிக்காலத்தில் விளையாட்டு துறை பெருமளவில் வளர்ச்சியடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
அதேபோல ஒலிம்பிக், ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த காலத்தை விட மோடி ஆட்சிக்காலத்தில் அதிகரித்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், இந்த வீரர்கள் பதக்கங்களையும் அதிக அளவில் குவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தை பொறுத்த அளவில் கிராமங்களில் விளையாட்டு மைதானம், மினி ஸ்டேடியம் போன்றவை கட்டப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications