விவசாயிகளின் உற்பத்தி பொருட்கள் பாதுகாப்பாக சந்தைகளுக்கு கொண்டுவரப்படுவதாக யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: விவசாயிகளின் உற்பத்தி பொருட்களை பத்திரமாக சந்தைக்கு கொண்டு வரும் வேலையை அரசு சிறப்பாக செய்து வருவதாக உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
பல்லியா மாவட்டத்தின் சிதாப் திராயாவில் நேற்று யோகி, ரூ.3,638 கோடி மதிப்பிலான 144 நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "ஒரு காலத்தில் இந்த மாவட்டம் சபிக்கப்பட்ட மாவட்டமாக இருந்தது. ஆனால் இன்று வளர்ச்சியின் அடையாளமாக இருக்கிறது. இதற்கு காரணம் பாஜக அரசுதான். உத்தரப் பிரதேசத்தை போலவே தற்போது இந்தியாவும் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்தியாவின் பாரம்பரியத்திற்கு 180 நாடுகள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகிறது.

உத்தரப் பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த சமாஜ்வாடி ஆட்சியில் எந்த நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. அப்படியே அவை அறிவிக்கப்பட்டாலும், அது வெறும் அறிவிப்போடு மட்டுமே நின்றுவிடுகிறது. ஆனால் தற்போது ஹல்டியா மற்றும் வாரணாசி இடையே பல்லியா வழியாக அறிமுகப்படுத்தப்பட்ட உள்நாட்டு நீர்வழி சேவை, மாவட்டத்தில் இருந்து புதிய காய்கறிகளை ஏற்றுமதி செய்வதில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
விவசாயிகள் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அவற்றை பாதுகாப்பது மற்றும் பத்திரமாக சந்தைகளுக்கு கொண்டு வருவது போன்ற வேலைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தற்போது இந்த மாவட்டத்தில் புதிய மருத்துவமனை ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அனைத்து அடிப்படை வசதிகளையும் கொண்டு உருவாக்கப்படும் இந்த மருத்துவமனை நாட்டின் பிற மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் தயாசங்கர் சிங், ஆயுஷ் மற்றும் உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை இணை அமைச்சர் தயாசங்கர் மிஸ்ரா 'தயாலு', சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் டேனிஷ் மிர்சா அன்சாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications