பிரதமரின் புதிய திட்டங்கள் மூலம் உத்தரப் பிரதேசம் வேகமாக வளர்கிறது! யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சுமார் 15 லட்சம் சாலையோர வியாபாரிகள் பிரதமரின் ஸ்வாநிதி திட்டத்தின் மூலம் பலன் பெற்றுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் நேற்று ஏராளமான சாலையோர வியாபாரிகளுக்கு புதியதாக கடன் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத், "இன்று நாம் அனைவரும் பிரதமரின் புதுமையான திட்டத்தை உணர்ந்து கொண்டிருக்கிறோம். குறிப்பாக கொரோனா தொற்று காலத்தில் இந்த திட்டம் ஏராளமான வியாபாரிகளுக்கு உதவியது. உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இத்திட்டத்தின் மூலம் 15 லட்சம் வணிகர்கள் பயனடைந்துள்ளார்கள்.

புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தை நீங்கள் பார்க்கிறீர்கள். ரிசர்வ் வங்கி மற்றும் நிதி ஆயோக் அறிக்கையின்படி, உ.பி., முதலீடு செய்வதற்கான சிறந்த இடமாக மாறியுள்ளது. புதிய நகர்ப்புறங்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த கால ஆட்சியில் இருந்த குண்டர்களும், மாஃபியாக்களும் பாஜக ஆட்சியில் அகற்றப்பட்டிருக்கிறார்கள். நமது மாநிலம் தற்போது வளர்ச்சி பாதையில் சீராக முன்னேறிக்கொண்டிருக்கிறது. விரைவில் நாம் 1 டிரில்லியன் பொருளாதாரத்தை எட்டுவோம்.
இவையெல்லாம் பிரதமர் நரேந்திர மோடியின் புதிய திட்டத்தால் சாத்தியமாகியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் உத்தரப் பிரதேசத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் மாநிலத்தில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை. தற்போது பாஜக அரசு இந்த வளர்ச்சியை சாத்தியப்படுத்தி வருகிறது. இதற்காக மார்ச் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முன்னெப்போதை விடவும் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, சுகாதாரம், தொலை தொடர்பு என 10 முக்கிய துறைகள் தலைகீழ் மாற்றம் பெற இருக்கிறது. தொடக்க கல்விக்காக கல்விக்காக மட்டும் ரூ.1,010 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி உருவாக்கப்பட இருக்கிறது. இதற்கு தடையாக இருப்பவர்கள் யாராக இருந்தாலும் சட்டம் தன் கடமையை செய்யும். அதேபோல நான் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போதுவரை இம்மாநிலத்தில் ஒரேயொரு கலவரம் கூட நடக்கவில்லை. அதேபால குற்றங்கள்/குற்றவாளிகள் இரும்பு கரம் கொண்டு அடக்கப்பட்டுள்ளனர். பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இங்கு மாஃபியாக்களின் ஆட்சிதான் நடைபெற்றுக்கொண்டிருந்தது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications