எளிதாக தொழில் தொடங்க ஏற்ற மாநிலம் உத்தரப் பிரதேசம்தான்! முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: எளிதாக தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலமாக உத்தரப் பிரதேசம் திகழ்கிறது என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இவை அனைத்தும் பாஜகவால் சாத்தியமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி குறித்து பேசிய அவர், தொழில் தொடங்குவதற்கு எளிதான மாநிலமாக உத்தரப் பிரதேசம் இருப்பதாக கூறியுள்ளார்.

காஜியாபாத்தில் உள்ள கிருஷ்ணா இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியின் 25 ஆண்டுகள் நிறைவையொட்டி, நடைபெற்ற நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பங்கேற்று பேசியிருந்தார். அப்போதுதான் தொழில் வளர்ச்சி குறித்த மேற்குறிப்பிட்ட கருத்தை கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "தற்போது, இந்தியா வளர்ச்சியின் புதிய உயரங்களைச் சந்தித்து வருகிறது. நாட்டின் 140 கோடி மக்களும் தங்கள் தலைமையை உயர்வாகக் கருதி, முழு மரியாதையையும் நம்பிக்கையையும் அளித்து வருகின்றனர்.
உத்தரப் பிரதேசம் ஒரு காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சியில் 8வது, 10வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது அது நாட்டுக்கே முன் மாதிரியான வளர்ச்சியை கொண்டிருக்கிறது. இந்த மாற்றம் புதிய இந்தியாவின் புதிய உத்தரப் பிரதேசத்தின் தோற்றத்தை பிரதிபலிக்கிறது. கடந்த 2017க்கு முதல் நமது மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் புலம் பெயர் தொழிலாளர்களாக வெளி மாநிலத்திற்கு சென்றிருந்தனர். அதேபோல அவர்கள் உ.பியை தங்களது சொந்த மாநிலமாக சொல்ல தயக்கப்பட்டனர். ஆனால் இப்போது நிலைமை தலைகிழாக மாறியிருக்கிறது. உ.பி புதிய பரிணாமத்தை எட்டியிருக்கிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications