போலீஸின் அதிரடிதான் குற்றங்களை குறைத்திருக்கிறது! உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு
லக்னோ: பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக உத்தரப் பிரதேசத்தை உருவாக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் மீதான குற்றங்கள் குறைந்திருப்பதற்கு போலீஸின் அதிரடி நடவடிக்கைதான் காரணம் என்று கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக கடந்த 2017ம் ஆண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. இதனையடுத்து கடந்த 2022ம் ஆண்டு தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. இதனையடுத்து இரண்டாவது முறையாக யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், அவர் முதலமைச்சராக பொறுப்பேற்று 6 ஆண்டுகள் நிறைவடைந்ததை பாஜக சிறப்பாக கொண்டாடி வருகிறது.

பாஜக யோகி ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு சென்றிருந்த நிலையில் எதிர்க்கட்சியினர் முக்கிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். அதாவது யோகி பொறுப்பேற்ற 6 ஆண்டுகளில் சுமார் 10,713 என்கவுன்ட்டர்கள் நடந்துள்ளதாகவும் அதில் 178 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது குறித்து விளக்கமளித்துள்ள யோகி ஆதித்யநாத், உத்தரப் பிரதேசத்தில் மாஃபியாக்களின் ஆட்சி அடக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் "இந்த என்கவுன்ட்டர் காரணமாக தான் மாநிலத்தில் பாலியல் குற்றங்கள், கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்கள் மீதான தாக்குதல் போன்ற குற்றங்கள் குறைந்திருக்கிறது. அதேபோல சமூக விரோதிகளிடமிருந்து சுமார் ரூ.4,500 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன. மாநிலம் நவீனமயப்படுத்தப்பட்டிருக்கிறது. இதற்கு இடையூராக உள்ளவர்கள் மீது கடுமையான நவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலம் தற்போது 1 டிரில்லியன் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறது.
கடந்த ஆட்சியில் உத்தரப் பிரதேசத்தில் வழிப்பறி, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள், கடத்தல் ஆகிய சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடைபெற்றன. ஆனால் பாஜக ஆட்சியில் அப்படி இந்த குற்றங்கள் குறைந்திருக்கின்றன. இதற்கு என்கவுன்ட்டர்கள்தான் முழு காரணம். தற்போது மாஃபியாக்கள் உயிருக்கு பயந்து காவல்துறையினரிடம் சரணடைந்து வருகின்றனர். இந்த மாநிலம் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக உருவாகி வருகிறது. இதற்கு காவல்துறையின் அதிரடி நடவடிக்கைதான் காரணம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications