8 மதிப்புமிக்க பிரதமர்களை உருவாக்கியவர்களே! யோசித்து ஓட்டளியுங்கள்! ப சிதம்பரம் பளீர்
லக்னோ: ‛‛எட்டு மதிப்புமிக்க பிரதமர்களை உருவாக்கிய நீங்கள் சட்டசபை தேர்தலில் யோசித்து ஓட்டளிக்க வேண்டும்'' என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப சிதம்பரம் உத்தர பிரதேச தேர்தல் பற்றி கூறினார்.
உத்தர பிரதேசத்தில் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. 7 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இன்று 5ம் கட்ட தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்து வருகின்றனர்.
இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப சிதம்பரம் உத்தர பிரதேச மக்களிடம் புள்ளி விபரங்கள் அடிப்படையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக ப சிதம்பரம் கூறியுள்ளதாவது:

கடன்கார மாநிலம்
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி என்பது சர்வாதிகாரம், மத வெறுப்புணர்வை தூண்டுதல், ஜாதி பகையை உருவாக்குதல், போலீசாருக்கு எதிரான அத்துமீறல்கள், பாலியல் வன்முறைகளின் கலவையாக உள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தை அவர் ஏழ்மையாக்கி உள்ளார். கடின உழைப்பாளர்களாக உள்ள மக்களை ஏழையாகவே வைத்துள்ளார். இந்த மாநிலத்தின் நிலுவை கடன் ரூ.6,62,891 கோடியாக உள்ளது. இதில் 40 சதவீதம் யோகியின் ஆட்சியில் வந்தது.

வேலையின்மை
மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17ல் 11.4 சதவீதத்தில் இருந்தது. இது 2020-21ல் 6.4 சதவீதமாக குறைந்துள்ளது. தனிநபர் வருமானம் தேசியளவில் உள்ள சராசரியை விட பாதியாக 1.9 சதவீதம் குறைந்துள்ளது. நிதி ஆயோக்கின் விபரப்படி உத்தர பிரதேசத்தில் 37.9 சதவீத மக்கள் ஏழைகள். இளைஞர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வேலையின்மை அதிகமாக உள்ள மாநிலமாக உத்தர பிரதேசம் மாறியுள்ளது. 15-29 வயதிற்குட்பட்டவர்களின் வேலையின்மை விகிதம் இரட்டை இலக்கத்தில் உள்ளது. ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2021 ஆண்டு நிலவரப்படி நகர்ப்புறங்களில் நான்கு இளைஞர்களில் ஒருவர் வேலையில்லாமல் இருந்துள்ளனர்.

அரசு காலியிடங்கள்
அரசு அலுவலகங்களில் அதிக காலியிடங்கள் உள்ளன. பணமின்றி நிரப்ப முடியாத சூழல் உள்ளது. வறுமையால் தொழிலாளர்கள் புலம் பெயர்ந்து வருகின்றனர். மாநிலத்தில் 16 பேரில் ஒருவர் புலம்பெயர் தொழிலாளியாக உள்ளார். மாநிலத்திற்கு 2.77 லட்சம் ஆசிரியர்கள் தேவைப்படுவதாகவும், மாணவர்-ஆசிரியர் விகிதம் இந்தியாவிலேயே உத்தர பிரதேசத்தில் தான் மோசமான நிலையில் உள்ளது. 8 பேரில் ஒருவர் 8 ம் வகுப்புக்குள் நிற்கிறார்.

குழந்தைகள் இறப்பு
பிறந்த குழந்தைகளின் இறப்பு சதவீதம் 35.7 ஆகவும், குழந்தை இறப்பு விகிதம் 50.4 ஆகவும், ஐந்து வயதுக்குட்பட்ட இறப்பு விகிதம் 59.8 ஆகவும் உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகம். மாவட்ட மருத்துவமனைகளில் ஒரு லட்சம் பேருக்கு 13 படுக்கைகள் மட்டுமே உள்ளன. மருத்துவர்களின் விகிதம் 0.64, செவிலியர்கள் 0.43 என தேசிய சராசரியை விட குறைந்துள்ளது.

8 பிரதமர்கள்
நீங்கள்(பொதுமக்கள்) 8 பிரதமர்களை டெல்லிக்கு அனுப்பியுள்ளீர்கள். அவர்கள் அனைவரும் மதிப்புமிக்கவர்கள். இந்த பட்டியலில் நரேந்திர மோடி சேர்க்கப்பட்டால், அவர் 9வது பிரதமராக இருப்பார். ஆனாலும் மாநிலத்தில் ஏழை மக்கள் நிறைந்து பெருளாதார வளர்ச்சி என்பது கீழ்நிலையில் உள்ளது. எனவே இது மாற்றத்திற்கான நேரம். எனவே காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளியுங்கள்.

நான்கு படைகள் மோதல்
தற்போதைய தேர்தல் மிகவும் கடினமானது. நான்கு படைகள் மோதுகின்றன. ஒவ்வொருவருக்கும் ஒரு பலமும், கவர்ச்சியும் உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாலின சமத்துவத்தை கொண்டு வந்துள்ளது. மாநிலத்தில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அனைவரும் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்க வேண்டும்'' என்றார்.












Click it and Unblock the Notifications