திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கம்.. பெரும் பரபரப்பு!
மதுரை: மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 87 பக்தர்கள் மயக்கமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு அதிக அளவிலான பக்தர்கள் கூடிய நிலையில் உரிய வசதிகள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோயில் நிர்வாகம் சார்பில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை என பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மயங்கி விழுந்தவர்களைப் போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வைகாசி விசாகம் கோலாகலமாக நடைபெற்றது. முருகனின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாக்களில் முதன்மையான வைகாசி விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடிகள் எடுத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் சுப்ரமணியசுவாமி திருக்கோயிலில் வைகாசி விசாக விழா கடந்த 21 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
தினமும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருளும் நிகழ்வும், அங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்ட ஊஞ்சலில் எழுந்தருளும் நிகழ்வும் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைக்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று வைகாசி விசாகத்தையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் பால்குடம் எடுத்து வரத் துவங்கினர். அதிகாலை 5.30 மணிக்கு ஆறுமுகம் கொண்ட சண்முகர், வள்ளி, தெய்வானை, மூலவர் கரத்தில் உள்ள தங்க வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. சண்முகர் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் சன்னதியில் இருந்து புறப்பாடாகி காலை 6 மணிக்கு சுவாமி விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளினார்.

தொடர்ந்து நேர்த்திக் கடன் செலுத்தும் பொருட்டு திருப்பரங்குன்றம், மதுரையை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தலையில் சுமந்துவந்த குடங்களில் இருந்த பால் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பக்தர்கள் பால், இளநீர், பன்னீர், மயில், புஷ்பம், பறவை காவடிகள் எடுத்து வந்தனர். ஏராளமானோர் 12 அடி அகலம் கொண்ட வேலால் அலகு குத்தியும், ஏராளமானோர் முதுகில் அலகு குத்தி தேர் இழுத்து வந்தும் சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர்.
வைகாசி விசாகத்தை முன்னிட்டு மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசலால் சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோயில் நிர்வாகம் சார்பில் முறையான குடிநீர் வசதி செய்து தரப்படவில்லை எனப் பக்தர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மயங்கி விழுந்தவர்களைப் போலீசார் உடனடியாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.












Click it and Unblock the Notifications