புயலுக்கு மத்தியில் ஒரு பூ.. ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது!
மதுரை: ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கி, வெள்ளத்திற்கு மத்தியில் ஹெலிகாப்டரில் மீட்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி பெண்ணுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

இதற்கிடையே, 17ஆம் தேதி, திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு கிளம்பிய செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில், தண்டவாளத்தின் அடிப்பகுதி அரித்துச் சென்றதால், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த ரயிலில் இருந்து 300 பேர் மீட்கப்பட்டு பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். ரயில் நிலையத்தில் மீதமுள்ள பயணிகள், சுற்றிலும் வெள்ளம் காரணமாக மீட்க முடியாத நிலை ஏற்பட்டது.
நேற்று காலையில் 2 டன் உணவு, தண்ணீருடன் மதுரையில் புறப்பட்ட ஹெலிகாப்டர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் ரயில் நிலையத்தில் சிக்கிய பயணிகளை மீட்க முடியாமல் திரும்பிச் சென்றது. ரயில் நிலையத்தில் ஒரே ஒரு கழிவறை மட்டுமே உள்ள நிலையில் அடிப்படை வசதிகள் இன்றி பயணிகள் தவித்து வந்தனர்.
பிரசவ வலியில் துடித்த கர்ப்பிணி! பறந்து வந்த ஹெலிகாப்டர்! நெகிழ்ந்து போன ரயில் பயணிகள்
இதனால், மீண்டும் பயணிகளை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது. சூலூரில் இருந்து வந்த இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரின் உதவியுடன் கர்ப்பிணி பெண் அனுசுயா, 3 குழந்தைகள் என மொத்தம் நான்கு பேர் மட்டும் பத்திரமாக மீட்கப்பட்டு மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முன்னுரிமை அடிப்படையில் கர்ப்பிணி பெண்ணான அனுசுயாவை விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர்.
நிறைமாத கர்ப்பிணியான அனுசுயா, ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்ட நிலையில், அவர மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அனுசுயாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. 2 நாட்களாக வெள்ளத்தில் சிக்கித் தவித்த கர்ப்பிணி பெண்ணான அனுசுயாவுக்கு, குழந்தை பிறந்த செய்தி, அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications