நோட் பண்ணிக்கோங்க.. அட்டை மூலம் பால் வாங்கவும் இனி ஆதார் எண் கட்டாயம்.. ஆவின் நிர்வாகம் புதிய முடிவு
மாதந்தோறும் அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆதார் எண் இணைப்பது கட்டாயம் என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மதுரை: மாதம் தோறும் பணம் செலுத்தி அட்டை மூலம் ஆவின் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அன்றாடம் விழித்ததும் இல்லத்தரசிகள் செய்யும் முதல் வேலையே பால் வாங்கி காஃபியோ டீயோ போடுவது தான். அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாகவே பால் உள்ளது. கிராமப்புறங்களில் நேரடியாக மாடுகள் வளர்ப்பவர்கள் வீட்டிற்கே சென்று பாலை வாங்கும் பழக்கம் தற்போதும் உள்ளது.
ஆனால், நகர்புறங்களில் இதை காண்பது அரிதிலும் அரிதான ஒன்றாகவே உள்ளது. இதனால் நகர்ப்புற மக்களின் தேவையை பாக்கெட் பால்தான் பூர்த்தி செய்கிறது. தமிழகத்தில் அரசின் பொதுத்துறை நிறுவனமான ஆவின் பால் விற்பனைதான் முன்னிலையில் உள்ளது.

பால் கொள்முதல்
ஆவின் பால் நிறுவனத்தின் மூலம் தினந்தோறும் 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படு வந்தது. ஆனால் தற்போது இது வெகுவாக குறைந்து 25 முதல் 30 லட்சம் லிட்டர் வரை மட்டுமே பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களும் ஆவின் பால் மீது வைத்துள்ள நம்பிக்கையின் காரணமாக அதன் விற்பனை அமோகமாக நடக்கிறது.

ஆவின் பால் தட்டுப்பாடு
ஆனால் கொள்முதல் குறைவாக இருப்பதனால் ஆவின் நிறுவனம் பால் விலையை உயர்த்தியது. ஆனாலும் ஆவின் பால் மீதான தரத்தின் நம்பிக்க்கையினாலும் மக்களின் தேவையின் காரணமாகவும் மக்கள் விரும்பி வாங்குகின்றனர். இதனால் பல நகரங்களில் ஆவின் பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தட்டுப்பாடு ஏற்படுவதினால், மக்கள் வேறு வழியின்றி தனியார் நிறுவனம் சார்ந்த பாலை வாங்கி பயன்படுத்துகின்றனர்.

ஆதார் எண் கட்டாயம்
ஆவின் நிர்வாகம் வாடிக்கையாளர்களுக்கு மாதாந்திர அட்டைகளை சலுகையுடன் நீண்ட காலமாக வழங்கி வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அட்டைகள் மூலம் பால் பெற்று வந்த வாடிக்கையாளர்களுக்கு ஆவின் நிர்வாகம் தற்போது புதிதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அட்டை மூலம் பால் வாங்கும் வாடிக்கையாளர்கள் இனி கட்டாயம் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. இந்த பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்டம் தோறும் மண்டல வாரியாக உள்ள அலுவலர்களுக்கு ஆவின் நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.

அடையாளத்திற்காக மட்டும் தான்..
இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் அதிகாரிகள் கூறும் போது, "ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதிக்குள் நேரடியாக ஆவின் நிறுவனத்தில் பணம் செலுத்தி அட்டையை வாடிக்கையாளர்கள் புதுப்பிக்கின்றனர். இவர்களுக்கு அரை லிட்டருக்கு 50 பைசாவும், ஒரு லிட்டருக்கு ஒரு ரூபாய் வரை சலுகை விலையில் பால் கிடைக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஆவின் பால் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கத்தில் ஆதார் எண்களை சேர்க்க இருக்கிறோம். ஆவின் வாடிக்கையாளர் என்ற அடையாளத்திற்காக மட்டுமே ஆதார் எண் சேகரிக்கப்படுகிறது. வேறு காரணங்கள் கிடையாது. ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு லிட்டர் பால் மட்டுமே என்று கூறுவதும் முற்றிலும் வதந்தி" என்றனர்.












Click it and Unblock the Notifications