'ஏன் இப்படி நடக்குதுனு ஒன்னுமே புரியல'.. மாரிமுத்து இறப்பால் கலங்கிய வடிவேலு.. சொன்ன விஷயம்
மதுரை: கிணத்தை காணோம் காமெடியை உருவாக்கியது மாரிமுத்துதான்.. அவர் இறந்ததை கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை.. என நடிகர் வடிவேலு தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு கூறுகையில், "மாரிமுத்து திடீர்னு போவார்னு நாம் யாருமே எதிர்பார்க்கவில்லை.. நான் இப்ப மதுரையில் இருக்கிறேன்.. நேற்று தான் என் தம்பிக்கு 13 வது நாள் காரியம்.. என் தம்பி மறைவுக்காக எல்லாரும் வீட்டில் சாமி கும்பிட்டு கொண்டிருந்தோம். அப்போது தான் மாரிமுத்து இறந்த செய்தியை கேள்விப்பட்டேன் நான்.

நான் கூட சீரியலில் தான் கிளைமேக்ஸில் இப்படி பண்ணிட்டாங்களோ என்று நினைத்தேன். அத்துடன் மாரிமுத்து இறந்து போனதை நான் முதலில் நம்பவில்லை.. ஆனால் கடைசியில் பார்த்தால், டப்பிங் பேசிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு இறந்துட்டார்னு செய்தி வந்தது. இதை கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாயிடுச்சு.. ஏன் இப்படி நடக்கிறது என்று எனக்கு புரியவில்லை..
என் கூட ராஜ்கிரண் சார் ஆபிஸில் இருந்து , ரொம்ப நெருங்கி பழகிய நபர் அவர்.. மாரிமுத்து இயக்கிய படம் தான் கண்ணும் கண்ணும்.. அதில் தான், போலீஸ் வரும், அடிச்சு கூட கேட்பாங்க சொல்லாதீங்க.. என்ற காமெடியை மாரிமுத்து தான் உருவாக்கினார். அதே கண்ணும் கண்ணும் படத்தில் கிணற்றை காணாம் என்ற காமெடியையும் மாரிமுத்துதான் உருவாக்கினார்.

பெரிய நகைச்சுவை சிந்தனையாளர் மாரிமுத்து.. ரொம்ப மனசுவிட்டு சிரிப்பாரு.. இப்ப கூட சமீபத்தில் பெண்ணுக்கூட, மனைவிகூட சேர்ந்து அவர் கொடுத்த பேட்டியை பார்த்தேன்.. அதில் ரொம்ப சந்தோஷமாக சிரிச்சு பேசிக்கொண்டிருந்தாரு.. அதை பார்த்து நானும் சந்தோஷப்பட்டேன்.. ஆனால் திடீரென அவர் இறந்து போய்விட்டார். இதுதான் சினிமாவில் பேரதிர்ச்சியாக உள்ளது. திரையுலகில் எல்லாருமே மிரண்டு போய்விட்டார்கள். படத்தில் நடித்த கதாபாத்திரங்களை போல் இல்லை மாரிமுத்து. நிஜத்தில் மிகவும் அருமையான ஆள்.. அவருடைய மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்." இவ்வாறு கூறினார்.

விஜய் அரசியல் குறித்து வடிவேலு : அப்போது செய்தியாளர் விஜய் அரசியலுக்கு வருவதுகுறித்து கேட்டார். அதற்கு பதில் அளித்த வடிவேலு, தாராளமாக வரட்டும். அரசியல் என்பது திறந்த கதவு, யார் வேண்டுமானாலும் வரலாம். அவரும் வரட்டும் எவரும் வரட்டும்.. ஏன் நீங்களும்கூட வாங்க என்றார்.












Click it and Unblock the Notifications