பாஜகவுக்கு முதலில் பல்லக்கு தூக்கியதே நீங்கதானங்க.. ஸ்டாலின் பேச்சுக்கு செல்லூர் ராஜூ ரிப்ளை!
மதுரை : பாஜகவுக்கு முதன்முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான், பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி, அமைச்சரவையிலும் அங்கம் வகித்து ஆண்டு அனுபவித்தது திமுக தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார்.
நேற்று சேலத்தில் நடைபெற்ற திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை நம்பி பாஜக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவிற்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்ற கட்சி அதிமுக. பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி தன்னுடைய ஆட்சியை காப்பாற்றிக் கொண்டவர் எடப்பாடி பழனிசாமி என விமர்சித்தார். அதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி பகுதியில் ஆர்.ஜே. தமிழ்மணி கல்வி அறக்கட்டளை மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் மற்றும் பொது மருத்துவ முகாமை இன்று நடத்தின. இதனை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் ஆர்.ஜே தமிழ்மணி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ஜெயந்தி ராஜுவும் இணைந்து துவக்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை விமான நிலையம் வரும்போது மின் வெட்டு ஏற்பட்டிருப்பது தமிழ்நாட்டில் உள்ள இருளடைந்த நிலையை அவருக்கு காட்டுவது போல் உள்ளது.
கரடி கதையை மாற்றிச் சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். திமுக எனும் கரடியிடம் தமிழ்நாடு மாட்டிக்கொண்டு தவிக்கிறது. கரடி கையில் சிக்கியது போலத்தான் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்திருக்கிறது. மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சியின் மீது திமுகவினரே அதிருப்தியில் உள்ளனர்.
பாஜகவுக்கு முதன்முதலில் பல்லக்கு தூக்கியது திமுக தான். பாஜகவுக்கு பல்லக்கு தூக்கி, அமைச்சரவையிலும் அங்கம் வகித்து ஆண்டு அனுபவித்தது திமுக தான். இப்போது காங்கிரஸுக்கு பல்லக்கு தூக்குகிறது. காங்கிரஸுக்கும் பல்லக்கு தூக்கி ஒரு லட்சத்தி 75 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஈடுபட்டது இந்த திமுக தான்.
கூட்டணி என்பது தோளில் போட்டிருக்கும் துண்டுக்கு சமம். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி. கூட்டணி என்பது தேர்தல் காலத்தில் மட்டுமே. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கேரளாவில் ஒருவருக்கொருவர் எதிர்த்துக்கொண்டு தமிழ்நாட்டில் கூட்டணி அமைப்பது கொள்கை கூட்டணியா?
அதிமுகவில் தான் இஸ்லாமியர் ஒருவர் அவைத்தலைவராக உள்ளார். அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராக பணியாற்றினார். பர்தா அணிந்த இஸ்லாமிய பெண்ணை அமைச்சர் ஆக்கியதும் அதிமுக தான். சிறுபான்மையினரான அப்துல் கலாமை குடியரசுத் தலைவர் ஆக்கியதும், பழங்குடி சமுதாயத்தைச் சார்ந்த சங்மாவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக ஆதரித்த பெருமையும் அதிமுகவுக்கு உள்ளது.
எங்கள் கட்சியை பொறுத்தவரை ஜாதி, மதம் என்றெல்லாம் பாகுபாடு இல்லை. எங்கள் எதிரி திமுக. எதிரியை வீழ்த்துவதற்காக கூட்டணி அமைக்கிறோமே தவிர, கொள்கை விட்டுவிட்டு கூட்டணி சேர்பவர்கள் அல்ல. அதிமுக இன்று ஒற்றுமையாக இருக்கிறது." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications