கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரளா அறிவிக்க தமிழ்நாடு அரசு அனுமதிப்பதா? வெடிக்கும் புது சர்ச்சை
கண்ணகி கோவில் வழிபாட்டு தேதியை கேரளா தன்னிச்சையாக அறிவித்துள்ளது சர்ச்சையாக வெடித்துள்ளது.கண்ணகி கோவில் வழிபாடு தேதியை கேரளா அறிவிக்க தமிழ்நாடு அரசு அனுமதிப்பதா? வெடிக்கும் புது சர்ச்சை
மதுரை: தமிழ்நாட்டுக்கு சொந்தமான கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாட்டு தேதியை கேரளா அரசு தன்னிச்சையாக அறிவித்திருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது. கண்ணகி கோவில் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு அலட்சியமாக இருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம் சாட்டி உள்ளார்.
சிலப்பதிகார காப்பிய நாயகி கண்ணகி கோவில், கேரளா எல்லையில் உள்ள விண்ணேற்றி பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது. தமிழ்நாட்டு அரசுக்கு சொந்தமானது இந்த கண்ணகி கோவில். அதேநேரத்தில் கேரளா வனப்பகுதி வழியாக செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறது.

பொதுவாக கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு சிறப்பாக நடைபெறும். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கண்ணகியை வழிபடுவதற்காக சித்ரா பவுர்ணமி நாளில் விண்ணேற்றி பாறை மலையில் ஒன்று கூடுவர். சித்ரா பவுர்ணமி வழிபாட்டு தேதியை தமிழ்நாடு அரசு முதலில் அறிவிக்கும். இதனைத் தொடர்ந்து கேரளா அரசு இதர நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
ஆனால் இந்த ஆண்டு கண்ணகி கோவிலில் சித்ரா பவுர்ணமி வழிபாடு மே 6-ந் தேதி நடைபெறும் என கேரளா அரசு அறிவித்திருக்கிறது. ஆனால் சித்ரா பவுர்ணமி மே 5-ந் தேதி வருகிறது. இந்த நிலையில் கேரளா அரசின் இந்த தன்னிச்சையான அறிவிப்பு பெரும் சர்ச்சையாகி உள்ளது.
இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் கூறியதாவது: தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வரும் போது எல்லாம் தமிழ்நாட்டு உரிமைகள் காவு கொடுக்கப்படுகின்றன. அதிமுக ஆட்சியில்தான் முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டம், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்தப்பட்டது.தற்போதைய திமுக ஆட்சி அமைந்தது முதல் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் முழு கொள்ளலவை எட்டவே இல்லை.
தற்போது கண்ணகி கோவில் விவகாரத்திலும் தமிழ்நாட்டு உரிமை பறிக்கப்பட்டுள்ளது. விண்ணேற்றிப் பாறை மலை உச்சியில் மங்கலதேவி கண்ணகி கோவில் இருக்கிறது. இந்த கோவிலில் சித்ரா பவுர்ணமி நாளில் பல லட்சம் தமிழர்கள் ஒன்று கூடி வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த கோவிலுக்கு எப்போது செல்லலாம்? என்ற அறிவிப்பை தமிழ்நாடு அரசுதான் அறிவிப்பது வழக்கம்.
இந்த ஆண்டு கண்ணகி கோவில் வழிபாடு மே 6-ல் நடைபெறும் என அறிவித்திருக்கிறது கேரளா அரசு. இது தமிழ்நாட்டு அரசின் உரிமையை பறிப்பதாகும். இதனை தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு கண்டிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு ஆபத்தானதாகும். ஆகையால் கேரளா அரசை கண்ணகி கோவில் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கண்டிக்க வேண்டும். இவ்வாறு ஆர்பி உதயகுமார் கூறினார்.












Click it and Unblock the Notifications