ஐடி ஊழியர் வீட்டில் ரூ.42 லட்சம் கொள்ளை.. செல்லூர் ராஜூ கார் டிரைவர் கைது.. கொத்தாக தூக்கிய போலீஸ்!
மதுரை: மதுரையில் நடைபெற்ற திருட்டு வழக்கு ஒன்றில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐடி ஊழியர் வீட்டில் இருந்த ரூ.42 லட்சம் திருடப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அதில் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநரும் ஒருவர்.
மதுரை அதிமுகவின் முக்கிய அடையாளமாக இருப்பவர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. மதுரை மேற்கு தொகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள செல்லூர் ராஜூ, இம்முறை விரைவாகவே தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். மதுரையில் ஏராளமான நலத்திட்ட உதவிகளை சாலை விபத்தில் உயிரிழந்த தனது மகன் தமிழ் மணி பெயரில் செய்து வருகிறார். இதனால் இவரிடம் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

செல்லூ ராஜூவின் கார் ஓட்டுநர்
இந்த நிலையில் திருட்டு வழக்கு ஒன்றில் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுரையைச் சேர்ந்த ஐடி ஊழியரின் வீட்டில் ரூ.42 லட்சம் பணம் திருடப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநரான சுரேஷ் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
திருவிழாவுக்கு சென்ற ஐடி ஊழியர்
மதுரை மாவட்டம் விளாங்குடி பகுதியில் உள்ள மீனாட்சி நகர் அபார்ட்மென்ட்டில் வசித்து வருபவர் ஜெயேந்திரன் கதிர்வேல். இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சொந்த ஊரான போடியில் கோயில் திருவிழாவிற்காக கடந்த ஜூன் 17ஆம் தேதி குடும்பத்துடன் சென்றுவிட்டு ஜூன் 21ஆம் தேதி வீடு திரும்பி இருக்கிறார்.
ரூ.42 லட்சம் கொள்ளை
அப்போது குடும்பத்தினர் வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த.ரூ.42 லட்சம் பணம் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. ஜெயேந்திரன் கதிர்வேலுக்கு சொந்தமான சொத்து ஒன்றை விற்பனை செய்ததன் மூலமாக ரூ.42 லட்சம் பணம் கிடைத்திருக்கிறது.
செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் சுரேஷ்
இதனால் அதிர்ந்த குடும்பத்தினர், உடனடியாக மதுரை கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து கூடல்புதூர் காவல்துறையினர் விசாரணை நடத்திய போது கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது பொதும்பு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் கார் ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
4 பேர் கைது
இவர் மட்டுமல்லாமல் கேகே நகரைச் சேர்ந்த பிரகாஷ், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த விவேக் ஆனந்த் மற்றும் திருப்பாலையைச் சேர்ந்த யோகேஷ் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதன்பின் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
பின்னர் கொள்ளையடித்த 4 பேரையும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி ஹரிஹரசுதன் முன்பு ஆஜர் படுத்தினர் அப்போது 4 பேருக்கும் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கார் ஓட்டுநர் திருட்டு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications