ராணுவ வீரர்கள் பற்றிய சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்டார் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜு
மதுரை: தனது பேச்சால் ராணுவ வீரர்களின் மனம் காயப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா நடத்திய தாக்குதலை நடத்தியது.

இதையடுத்து பாகிஸ்தான் ராணுவத்தினருக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்தது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்தி வந்த தாக்குதல் முயற்சிகளையும், இந்தியா முறியடித்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவான நிலையில் பாகிஸ்தானை எதிர்த்து போரிடும் இந்திய வீரர்களை போற்றும் விதமாக சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி நடத்தப்பட்டது.
அதை விமர்சித்து அண்மையில் பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ "ராணுவ வீரர்கள் என்ன எல்லையிலேயா சென்று சண்டை போட்டார்கள். போருக்கு தேவையான அதிநவீன ஆயுதங்கள், தொழில்நுட்பங்களை வாங்கிக் கொடுத்தது மத்திய அரசுதான். எனவே திமுக பிரதமர் மோடியைத்தான் பாராட்ட வேண்டும்" என பேசியிருந்தார்.
அவரது இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்தன. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மன்னிப்பு கேட்க வேண்டும் என முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் தெரிவித்தனர். செல்லூர் ராஜூவின் இந்த பேச்சை கண்டித்து ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் பலரும் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சர்ச்சை கருத்து தொடர்பாக செல்லூர் ராஜூ மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "இந்திய நாட்டை, கண்களை இமை காப்பது போல் பாதுகாக்கும் எனது உயிரினும் மேலான ராணுவ வீரர்களை நான் எப்போதும் வணங்குபவன். அவர்களின் தியாகத்தை போற்றுபவன். எனது செய்தியாளர் சந்திப்பில் திமுகவின் பேரணி குறித்து கேட்டபோது, அது ஒரு நாடகம் என்றும், அவர்கள் மத்திய அரசையும் பாராட்டாமல் நாடகமாடுகிறார்கள் என்றும் கூறினேன்.
ஆனால், திமுக தொலைக்காட்சிகள் எனது பேச்சை திரித்து ஒளிபரப்பிவிட்டன. உடனடியாக எனது எக்ஸ் தளத்தில் இதற்கு மறுப்பு தெரிவித்தேன். இருப்பினும், ராணுவ வீரர்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக அவர்களிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். எனது குடும்பம் முன்னாள் மற்றும் இன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பம் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications