எடப்பாடியை பஸ்சில் விரட்டிய 10.5%.. பாய்ந்து வந்த பாதுகாவலர்.. படாரென செல்போனை தட்டி.. பதறிய மதுரை
மதுரை விமான நிலையத்தில் இபிஎஸ்-க்கு எதிராக முழக்கமிட்டவரை அதிமுக தொண்டர்கள் தாக்கியுள்ளனர்.
மதுரை: மதுரை விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என்று விமர்சித்த நபரை, அதிமுகவினர் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. விமான நிலையப் பேருந்தில் இருந்து கீழே இறங்கிய நபரின் சட்டையை பிடித்து முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே அதிமுகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
இதற்காக அவர் சென்னையில் இருந்து இன்று காலை 10.30 மணி அளவில் விமானம் வாயிலாக மதுரை வந்தடைந்தார். அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி
முன்னதாக எடப்பாடி பழனிசாமியுடன் விமானத்தில் பயணித்த ஒருவர், அவரை அவதூறாக பேசியுள்ளார். விமானத்தில் இருந்து இறங்கி பேருந்தில் வந்த போது, துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமியுடன் பயணிக்கிறேன். துரோகத்தின் அடையாளம் எடப்பாடி பழனிசாமி, சின்னம்மாவுக்கு துரோகம் செய்தவர். 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கி தென் மாவட்ட மக்களுக்கு துரோகம் செய்தவர் என்று பேசியுள்ளார்.

விமர்சித்தவர் கைது
அவர் பேசிக் கொண்டிருந்த போது, எடப்பாடி பழனிசாமியின் பாதுகாவலர் அவரின் செல்போனை பிடுங்கியுள்ளார். அதேபோல் அவர் பேசியதை ஃபேஸ்புக்கிலும் லைவ் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த நபரை காவல்துறையினர் கைது செய்ததாக தகவல் வெளியாகியது.

இபிஎஸ் விமர்சித்தவர் யார்?
முதல் கட்ட விசாரணையில் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக மதுரை விமான நிலையத்திற்கு வந்த அவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி எம். வையாபுரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்பது தெரிய வந்துள்ளது. இதனிடையே எடப்பாடி பழனிசாமியை துரோகத்தின் அடையாளம் என்று விமர்சித்த ராஜேஸ்வரன் மீது, அதிமுகவினர் விமான நிலையத்திலேயே தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அதிமுகவினர் தாக்குதல்
பேருந்தில் இருந்து ராஜேஸ்வரனை கீழே இறக்கி சட்டையை பிடித்து இழுத்து வரும் அதிமுகவினர், அவரை சரமாரியாக தாக்குகின்றனர். அப்போது எடப்பாடி பழனிசாமியை வரவேற்க காத்திருந்த ஆர்பி உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோரும் உள்ளனர். இந்த வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் எதிர்ப்பு
ஏற்கனவே சிவகங்கையில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்கள் ஒட்டியுள்ள நிலையில், மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவரே துரோகத்தின் அடையாளம் என்று விமர்சித்ததும், அதற்காக அதிமுகவினர் அவரை தாக்கியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications