அனல் பறக்கும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. சூரி மாடு எங்கப்பா.. வீர விளையாட்டை ரசித்த பிரபலங்கள்
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அனல் பறக்க நடந்து வருகிறது. காலை முதலே வாடி வாசலில் துள்ளி வரும் காளைகளை வீரர்கள் அடக்கி பரிசுகளை தட்டிச்செல்கின்றனர். மேடையில் அமைச்சர் உதயநிதியுடன் நடிகர்கள் அருண் விஜய், சூரி, நீயா நானா கோபிநாத் உள்ளிட்ட பிரபலங்களும் அமர்ந்து ரசித்தனர்.
தமிழர்களின் பாரம்பரியமான விளையாட்டான ஜல்லிக்கட்டு, ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் நடைபெறும். அவனியாபுரத்தில் 15 ஆம் தேதியும், பாலமேட்டில் 16 ஆம் தேதியான நேற்றும் வெகு சிறப்பாக ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது.

இந்தநிலையில், உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 7 மணிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலாவதாக களத்தில் வீரங்கொண்டு விளையாடும் அலங்காநல்லூர் முனியாண்டி சுவாமி கோயில் காளை களமிறங்கியது.
கோயில் காளைகளை தொடர்ந்து மற்ற ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்பட்டது. வீரர்கள் போட்டிக் கொண்டு காளைகளை அடக்கி வருகின்றனர். இப்போட்டியில் விளையாட 6,099 காளைகளும், 1,784 வீரர்களும் முன்பதிவு செய்திருந்த நிலையில், இதில் தகுதியுள்ள 1,200 காளைகளுக்கும், 800 வீரர்களுக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பாக விளையாடும் காளையர்களுக்கும், காளைகளுக்கும் தங்கம், வெள்ளி நாணயங்களும், பீரோ, டிவி, கட்டில் உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோக பொருட்களும் பரிசாக வழங்கப்பட்டு வருகின்றன. வெற்றி பெறும் முதல் வீரருக்கும், காளைக்கும் தலா ஒரு கார் பரிசும், இரண்டாம் வீரருக்கும், காளைக்கும் பைக் பரிசாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூரில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை காண பல்வேறு திரை பிரபலங்கள் வந்துள்ளனர். நடிகர் அருண் விஜய் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டு ரசித்தார். மிஷன் படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் மேடையில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தார்.
பாலமேட்டில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்ற நடிகர் சூரி, இன்று நடைபெற்று வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டையும் பார்வையிட்டார். நடிகர் சூரியின் காளையும் இன்றைய போட்டியில் களமிறங்குகிறது. சூரி மாடு எங்கப்பா என்று கேட்க பலரும் ஆவலுடன் வாடிவாசலை கவனித்தனர். இன்றைய தினம் வெற்றி பெரும் வீரர்களுக்கும், காளைக்கும் உதயநிதி ஸ்டாலின் சார்பில் தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா, நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கோபிநாத் தனது மகளுடன் ஜல்லிக்கட்டு போட்டியை ரசித்தார். நடிகர் சூரியிடம் தனது குடும்பத்தினரை அறிமுகம் செய்தார். இந்த விழாவில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று தங்கக்காசுகளை பரிசளித்தனர்.












Click it and Unblock the Notifications