Save அரிட்டாப்பட்டி.. பாலமேடு ஜல்லிக்கட்டு.. பார்வையாளர்கள் மேடையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போஸ்டர்!
மதுரை: பாலமேடு ஜல்லிக்கட்டு பார்வையாளர் மேடையில் டங்ஸ்டன் எதிர்ப்பு போஸ்டர் ஒட்டப்பட்டு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் Save அரிட்டாப்பட்டி என்ற வாசகம் இடம்பெற்றிருக்கும் சூழலில், பதாகைகளை ஏந்தி மக்கள் பலரும் பங்கேற்றிருப்பது பலரின் கவனத்தை திருப்பியுள்ளது.
மாட்டுப் பொங்கலை முன்னிட்டு மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆயிரம் காளைகளும், 900 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நிலையில், 6 காளைகளை அடக்கிய மஞ்சம்பட்டி துளசி என்பவர் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

அதேபோல் அஜித் குமர், தினேஷ் மற்றும் முத்துபிரகாஷ் ஆகியோர் தலா 2 காளைகளை அடக்கி இறுதிச்சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றனர். அதேபோல் 7 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மது அருந்தி களத்திற்கு வந்ததால் 4 பேரும், 3 பேர் உடல் எடை குறைவாக இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டின் முதல் சுற்றில் 5 மாடுபிடி வீரர்கள் காயமடைந்துள்ளனர். அதேபோல் மொத்தமாக 101 மாடுகள் அவிழ்த்துவிடப்பட்ட நிலையில், 19 மாடுகள் மட்டுமே பிடிமாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை பார்க்க காலை முதலே மக்கள் அதிகளவில் கூடி வருகின்றனர். அவர்களுக்கான பார்வையாளர்கள் மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு பார்வையாளர்கள் மேடையில் "Save அரிட்டாப்பட்டி" என்ற போஸ்டர் ஒட்டியுள்ளனர். டங்ஸ்டன் திட்டத்தை கைவிடக் கோரியும் மக்கள் பதாகைகளை ஏந்தி ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்த்து வருகின்றனர். மதுரை மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான ஏலம் தொடர்பான அறிவிப்பில், இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் சுரங்கம் அமைக்க தேர்வானதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த சுரங்கம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திட்டத்தை கைவிடும்படி விவசாயிகள் போராடி வந்தனர். மேலூர் விவசாயிகள் சார்பாக நடத்தப்பட்ட பேரணி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கப்படாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே அறிவித்தார். அதேபோல் விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிடக் கோரி அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் மத்திய அரசு அறிவிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications