நீ தான் என் உயிரு.. அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன பண்ணுவ.. வாசனால் மறக்க முடியாத பதில்
மதுரை: "அண்ணே நீ தான் என் உயிரு.." என்று டிடிஎப் வாசனையை கட்டிப்பிடித்து விடாமல் செல்பிக்கு இளைஞர்கள் கத்திய படி சென்றனர். ஒருவழியாக செல்பி எடுத்த இளைஞர்களிடம் அங்கிருந்தவர் அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன பண்ணுவ என்று ஒரு கேள்வி கேட்டார்.. அதற்கு அவர் அளித்த பதிலை டிடிஃஎப் வாசன் வாழ்நாளில் மறக்க மாட்டார்.
பிரபல யூடியூபரான டிடிஎப் வாசன், காஞ்சிபுரம் அருகே சில மாதங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிள் ஓட்டி, விபத்தில் சிக்கினார். இவர் அடிக்கடி மோட்டார் சைக்களில் சாகசம் செய்து வந்த சர்ச்சையில் சிக்கியிருந்த காரணத்தால், கைது செய்யப்பட்டதுடன் 10 ஆண்டுகள் மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கில் ஜாமீன் பெற்று வெளியில் இருந்த டிடிஎப் வாசன், கடந்த மே 15-ந்தேதி மதுரை வண்டியூர் பகுதியில் கார் ஓட்டிக்கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்தார். அநத வீடியோவை பார்த்த மதுரை அண்ணாநகர் போலீசார் டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவரை கைது செய்த அண்ணா நகர போலீசார், நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சுப்புலட்சுமி முன்பு ஆஜர்படுத்தினர்.
அப்போது வாசன் தரப்பு வக்கீல் ஆஜராகி, வாசனால் தனிமனிதர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, ஏற்கனவே வாசனின் டிரைவிங் லைசென்சு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை மீறி தற்போது நடந்து கொண்டிருக்கிறார். எனவே டிடிஎப் வாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வலைதளங்களில் இவரது வீடியோவை பார்த்து மற்றவர்களும் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட வாய்ப்புள்ளது என வாதிட்டார். விசாரணை முடிவில், டி.டி.எப்.வாசன் மீதான வழக்கில் பிரிவு 308-ஐ ரத்து செய்து, அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மேலும் இனி இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டேன் என டிடிஎப் வாசன் உறுதிமொழி கடிதம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இதனிடையே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு டிடிஎப் வாசனை போலீசார் அழைத்து வந்தபோது, "வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது.. யாருக்கும் தெரிவதில்லை. மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்துபவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை. என்னை போன்றவர்கள் மீது பொய் வழக்குபதிவு செய்வது எந்த விதத்தில் நியாயம்?" என்று கோஷம் எழுப்பியவாறு சென்றார்.
இந்நிலையில் மதுரையில் ஜாமீனில் வெளியே வந்த டிடிஎப் வாசனிடம் அவரது ஆதரவாளர்கள் செல்பி எடுக்க வேண்டும் என்று வெறித்தனமாக சுற்றினார்கள். அவர்களுக்கு செல்பிக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒருவழியாக போராடி காரில் ஏற முயன்றார் டிடிஎப் வாசன். அப்போது 'அண்ணே நீ தான் என் உயிரு..' என்று கட்டிப்பிடித்தபடி இளைஞர்கள் கத்தினார்கள். பின்னர் ஒருவழியாக டிடிஎப் வாசன் காரில் ஏறி சென்றார். அப்போது அங்கிருந்த இளைஞரிடம் ஒருவர் 'அண்ணே நீ தான் என் உயிரு..'அண்ணனுக்கு ஒரு பிரச்சனை என்றால் என்ன பண்ணுவ' என்று கேட்டார். அதற்கு பதில் அளித்த டிடிஎப் வாசன் ஆதரவாளர்.. ஒண்ணும் பண்ண மாட்டேன் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications