யோகி அரசு இங்க வந்து 10000 கோடி அள்ளிட்டு போனாங்க.. ஸ்டாலின் என்ன பண்றார்னு பார்ப்போம் : அண்ணாமலை
மதுரை : உத்தர பிரதேச அரசு தமிழ்நாட்டுக்கு வந்தே ரூ.10,000 கோடி மதிப்புள்ள முதலீடுகளை அள்ளிச் சென்றுள்ளது, முதல்வர் ஸ்டாலின் சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குச் சென்று எவ்வளவு கொண்டு வருகிறார் என்று பார்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறை பயணமாகச் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திரும்புகிறார். இந்த பயணத்தின்போது சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு தலைவர்கள், தொழிலதிபர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்.

முதல்வர் ஸ்டாலின் முதலீட்டு ஒப்பந்தங்கள் : முதலில் சிங்கப்பூர் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மே 24 ஆம் தேதி அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாடு அரசு - சிங்கப்பூரை சேர்ந்த முக்கிய நிறுவனங்கள் இடையே 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஸ்டாலின் முன்னிலையில் 6 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க ரூ.818 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும் ரூ.128 கோடி மதிப்பில் மருத்துவ உபகரண நிறுவனமான ஓம்ரான், தமிழ்நாட்டில் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பிய பிறகு, இந்த 9 நாள் பயணத்தில் ஈர்க்கப்பட்ட முதலீடுகள், மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்த முழுமையான விவரம் வெளியாகும். இந்நிலையில், மதுரைக்கு கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அண்ணாமலை பேட்டி : அப்போது, முதல்வர் ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் பயணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "முதல்வர்கள் வெளிநாடு செல்வது வரவேற்க வேண்டிய விஷயம். அவர் மட்டும் தனிமனிதனாகச் செல்லவில்லை. அவருடன் அதிகாரிகளும் சென்றுள்ளனர். ஆனால் இந்த பயணம் ஆக்கபூர்வமாக இருக்க வேண்டும், அவர் தமிழ்நாட்டை மட்டும் அல்ல, இந்தியாவை அடையாளப்படுத்த சென்றுள்ளார்.
பிரதமர் மோடியின் அடையாளமான இந்தியா தற்போது உலகம் முழுவதும் முதலீட்டை ஈர்க்கிறது. இதற்குக் காரணம் பிரதமர் மோடி தான். இதை வைத்துக் கொண்டு நம்மால் முதலீட்டை ஈட்ட முடியவில்லை என்றால் வேறு எதையும் செய்ய முடியாது. பிராண்ட் ஸ்டாலின் இன்று சிங்கப்பூர் ஜப்பானில் இல்லை. பப்புவா நியு கினியா முதல் அமெரிக்கா வரை இன்று இருக்கும் ஒரே பிராண்ட் மோடி தான். முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி பிராண்டை வைத்து எந்த முதலீட்டை எவ்வளவு முதலீட்டை ஈர்க்கிறார் என்பதை காண நாங்களும் ஆவலோடு இருக்கிறோம்.
உ.பி அள்ளிட்டு போனாங்க : உத்தர பிரதேச அரசு கடந்த ஜனவரி மாதம் சென்னை வந்து ரோட் ஷோ நடத்தி 10,000 கோடி ஒப்பந்தம் கையெழுத்து பெற்றுச் சென்றுள்ளனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட வரவில்லை. இரண்டே இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் வந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலபதிபர்களிடம் உ.பியில் ரூ. 10000 கோடிக்கு முதலீட்டை பெற்றுச் சென்றுள்ளனர்.
ஆனால் முதல்வர் ஜப்பான், சிங்கப்பூர் சென்றுள்ளார். இந்த பத்தாயிரம் கோடி முதலீட்டையாவது சமன் செய்வாரா என்று நான் பார்க்க காத்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கு வந்தே ரூ.10,000 கோடி பணத்தை உ.பிக்கு எடுத்துச் சென்றிருக்கும்போது, ஜப்பான், சிங்கப்பூர் சென்ற முதல்வர் அதையாவது குறைந்தபட்சம் சமன் செய்வாரா? அதை சமன் செய்யவில்லை என்றால் அந்தப் பயணம் அவசியமற்றது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications