சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் இயக்குநர் சுந்தர் சி.யை ஆதரித்து பிரச்சாரம் செய்த போது அப்போ புரியலை, இப்போது புரியுது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தலைவர் 173 படத்தில் இருந்து சுந்தர் சி விலகியதை சுட்டிக் காட்டி அண்ணாமலை பேசினார்.
மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். சுந்தர் சியை ஆதரித்து அண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், இரு சூப்பர்ஸ்டார்களை வைத்து படம் இயக்கும் வாய்ப்பு சுந்தர் சி.க்கு கிடைத்தது. ஆனால் அவர் அதை மறுத்துவிட்டார். ஒரு இயக்குநர் தனக்கு கிடைத்த மிகப் பெரிய சான்ஸை, அதுவும் ஒருவர் அல்ல, இரு சூப்பர்ஸ்டார்களை கொண்டு இயக்கும் வாய்ப்பை இவர் வேண்டாம் என்கிறாரே என நினைத்தேன்.
ஆனால் எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. அதாவது மதுரை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே அவர் இது போல் தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்திருக்கிறார். அவரை வெற்றி பெற செய்யுங்கள், இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என கேட்டுக் கொண்டார்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் ரஜினிகாந்தின் 'தலைவர் 173' படம் உருவாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பும் படக்குழு சந்தித்த வீடியோவும் வெளியான நிலையில், திடீரென சுந்தர் சி அந்தப் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்தார் - இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அறிவிப்பு வெளியான நிலையில், "கடந்த சில நாட்களில் நாங்கள் பகிர்ந்து கொண்ட சிறப்பு தருணங்கள் என்னால் என்றென்றும் பொக்கிஷமாகக் கருதப்படும். இந்த வாய்ப்பிலிருந்து நான் விலகினாலும், அவர்களின் நிபுணர் வழிகாட்டுதலை நான் தொடர்ந்து நாடுவேன். இந்தச் செய்தி ஆவலுடன் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தவர்களுக்கு என் மனமார்ந்த மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்" என்று சுந்தர் சி தெரிவித்திருந்தார்.
சுந்தர் சி சொன்ன கதையில் ரஜினிகாந்துக்கு திருப்தி இல்லாதது தான் விலகலுக்கான காரணம் என்று கூறப்பட்டது. சுந்தர் சி சொன்ன கதையில் ரஜினிகாந்த் பல மாற்றங்களை செய்யச் சொன்னதாகவும், அது பிடிக்காததால் சுந்தர் சி அப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் கூறப்பட்டது.
தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வழங்கிய பேட்டியில், "பிரமாண்டமாக இல்லாமல், அடிதடி இல்லாமல், சந்திரமுகி போல லைட்டர் வெயிட் கதையில் நடிக்க விரும்புவதாக கமலிடம் சொல்லி பிரியப்பட்டுள்ளார் ரஜினி. அதற்கு கமல், சுந்தர் சியை வைத்து எடுக்க சொன்னாராம்" என்று விவரித்தார்.
அருணாச்சலம் படத்திற்கு பிறகு பல ஆண்டுகளாக டாப் ஹீரோக்களை வைத்து படங்களை இயக்காமல் இருந்த சுந்தர் சிக்கு, ரஜினிகாந்தை மீண்டும் இயக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தும் - அல்வா போல வந்து போனது என்று திரையுலகமே ஆதங்கப்பட்டது.
சுந்தர் சி விலகிய நிலையில், டான் படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி தலைவர் 173 படத்தை இயக்குவார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. தற்போது இயக்குனர் அஷ்வத் மாரிமுத்துவுடன் ரஜினிகாந்த் இணைந்து தலைவர் 173 படத்தில் பணியாற்றுவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. தற்போது இவரும் மாற்றப்படுகிறார் என சொல்லப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications