பிறப்பு சான்றிதழில் திருத்தம்.. பிறப்பு, பள்ளிச்சான்று.. ராணுவ வீரர் மனைவிக்கு ஆதார்: மதுரை ஹைகோர்ட்
மதுரை: இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.. இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகமே பதிவு செய்து கொடுத்து விடுகிறது. குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்து கொள்ளலாம். இந்நிலையில், பிறப்புச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்று அடிப்படையில் பிறந்த தேதியில் மாற்றம் செய்து மறைந்த ராணுவ வீரர் மனைவிக்கு ஆதார் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. வழக்கின் விவரம் என்ன?
பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், மிக மிக முக்கிய ஆவணமாக திகழ்ந்து வருகிறது பிறப்புச்சான்றிதழ். அந்தவகையில், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசு வேளைகளில் சேருவதற்கு என அனைத்திற்குமே ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தப்பட்டும் வருகிறது.

பிறப்பு சான்றிதழ்
அதேபோல, பிறப்பு சான்றிதழில் பிழை ஏதாவது இருந்தால், அந்த பிழையை உடனடியாக திருத்திவிடலாம். இதற்கு பிறப்பு பதிவாளரை அல்லது, சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் ஒருவரை அணுகலாம்.
பிறப்பு சான்றிதழில் பிழையை திருத்த வேண்டும் என்று, பிரத்யேகமான மனுவை இதற்கு தரவேண்டியிருக்கும்.. பிறகு, குழந்தையின் பெற்றோரின் அடையாள சான்றிதழ், மருத்துவமனையில் பிறந்த குழந்தை என்றால் டிஸ்சார்ஜ் சம்மரி போன்றவற்றை இணைத்து தந்தால் போதும். அவைகளை சரிபார்த்து, உங்கள் மனுவையும் ஏற்று, பிழையையும் திருத்தி தந்துவிடுவார்கள்.
இந்நிலையில், பிறப்பு சான்றிதழ் குறித்தம் வழக்கு ஒன்றில் முக்கிய உத்தரவினை மதுரை ஹைகோர்ட் பிறப்பித்துள்ளது.. மதுரை மாவட்டம் அய்யம்பட்டி ஐஸ்வர்யா என்பவர் மதுரை ஹைகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.. அதில், "எனக்கு இன்பராஜா என்பவருடன் திருமணம் நடந்தது. அவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தார். அவர் ஒரு விபத்தில் கடந்த 2024 டிசம்பர் 22 ல் இறந்துவிட்டார்.
ஆதார் அட்டை நகல்கள்
குடும்ப ஓய்வூதியத்திற்காக எனது ஆதார் அட்டை நகலை ராணுவ நிர்வாகத்தில் சமர்ப்பித்தேன். அப்போது என்னுடைய பிறந்த தேதி 2006 மே 2 என்பதற்கு பதில் 2005 மே 2 என்று குறிப்பிட்டிருந்ததை அறிந்தேன். பிறந்த தேதியில் திருத்தம் செய்து ராணுவ அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதற்காக டில்லியிலுள்ள இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் விண்ணப்பித்தேன்.
பதிவு விண்ணப்பம் மற்றும் பிறந்த தேதி ஆவணச் சான்றிலுள்ள விபரங்கள் பொருந்தும் வகையில் இல்லை எனக்கூறி ஆன்லைன் மூலம் நிராகரித்தனர். அது சட்டவிரோதமானது என ரத்து செய்ய வேண்டும். பிறந்த தேதியை திருத்தம் செய்து வழங்க தனித்துவ அடையாள ஆணையம், மதுரை புதுார் ஆதார் பதிவு மண்டல அலுவலகத்திற்கு உத்தரவிட வேண்டும" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
பள்ளிச்சான்றிதழ்கள்
இந்த மனுவை நீதிபதி வி.லட்சுமி நாராயணன் விசாரித்தார்.. பிறகு தன்னுடைய உத்தரவில், "ஆவடியிலுள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் 2006 ஜூன் 23 ல் வழங்கிய பிறப்புச்சான்றை மனுதாரர் சமர்ப்பித்துள்ளார். இதன்படி மனுதாரர் சென்னை திருமுல்லைவாயிலிலுள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்துள்ளார். அவர் பிறந்த 2 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட்டது. தமிழக அரசு வழங்கிய 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பள்ளிச் சான்றிதழ்களில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என்பதை குறிப்பிடுகிறது.
ஆதார் அதிகாரிகளிடம் உள்ள சான்றானது, அது ஒருவேளை மனுதாரரால் ஏற்பட்ட தவறின் விளைவானதாகக்கூட இருக்கலாம். பிறப்புச்சான்று, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 சான்றுகளின் அடிப்படையில் மனுதாரர் 2006 மே 2 ல் பிறந்தார் என முடிவு செய்கிறேன். இதன்படி மாற்றம் செய்து ஆதார் சான்றை மனுதாரருக்கு வழங்க வேண்டும்" என்று உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications