நடுக்கடலில் படகில் பதுங்கி உள்ளாரா புஸ்ஸி ஆனந்த்? ஜாமீன் கேட்டு உச்சநீதிமன்றம் செல்ல திட்டம்
மதுரை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொது செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் ஆகியோரது முன் ஜாமீன் மனுவை மதுரை உயர்நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்த நிலையில் இருவரையும் கைது செய்ய 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் ராமேஸ்வரம் கடல் பகுதியில், கடலுக்குள் படகில் பதுங்கி இருப்பதாகவும், அங்கு ரோந்து பணியில் ஈடுபட தனிப்படை போலீசார் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
விஜய்யின் கரூர் வேலுசாமிபுரம் பிரசார கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகி இருப்பது பெரும் துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 110 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்தனர். அவர்கள் கரூர் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். நேற்று இரவு அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

5 பிரிவுகளில் வழக்கு
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கரூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதேபோல், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. இதேபோல் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறப்பு புலனாய்வு குழு இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது.
தவெக பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதில் மதியழகன் மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த தவெக நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதன்பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவான புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த், இணை செயலாளர் நிர்மல்குமாரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். நேற்று முன் தினம், அவர்கள் தரப்பில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மதுரை உயர் நீதிமன்றம் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அரசுத் தரப்பு வாதத்தை ஏற்று இருவரின் முன்ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டர்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர்கள் இருவரும் வழக்கில் இரண்டு மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் குற்றவாளியான மதியழகன் கைது செய்யப்பட்டு இருக்கிறார். 41 பேர் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களில் பலர் ஐசியூவில் உள்ளனர். விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்க முடியாது'' எனக் கூறி தள்ளுபடி செய்தார்.
செல்போன் சுவிட்ச் ஆஃப்
இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடிஆர் நிர்மல்குமாரை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. போலீசார் தீவிரமாக இருவரையும் தேடி வரும் நிலையில் அவர்கள் தலைமறைவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோர்ட் உத்தரவிட்ட பிறகும் இருவரும் தலைமறைவாக இருந்து வருகிறார்கள். இதில் புஸ்ஸி ஆனந்த் ராமேஸ்வரம் பகுதிக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டு ராமேஸ்வரம் சென்றதாகவும், சிக்னல் கிடைக்காத இடத்திற்கு அவரை தவெக நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடலில் படகில் பதுங்கியுள்ளதாகவும் தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அவரை பிடிக்க தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
ரோந்து பணியை தீவிரப்படுத்த
இதற்காக கடல் பகுதியில் ரோந்து பணிகளையும் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். சனி, ஞாயிறு கிழமைகளில் நீதிமன்றம் விடுமுறை என்பதால் நாளை திங்கட்கிழமை சுப்ரீம் கோர்டில் முன்ஜாமீன் கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் போலீசாரிடம் சிக்காமல் இருக்க அவர் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications