தமிழக பாஜகவின் அடுத்தடுத்த அதிரடிகள்.. யாரந்த நம்பிக்கை நட்சத்திரம்? மலைத்து பார்க்கும் திமுக
மதுரை : நாடு முழுவதும் இன்னும் எம்பி தேர்தலே நடந்து முடியாத நிலையில், தமிழக பாஜக அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இதுதான் தமிழக அரசியல் கட்சிகளை வியப்புக்கு ஆளாக்கி வருகிறது.
கடந்த வாரம், கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.. அப்போது, தமிழக பாஜக தலைவர் சில முக்கிய அறிவுரைகளை கட்சி நிர்வாகிகளுக்கு தந்திருந்தார்.

நுணுக்கம்: குறிப்பாக, "சட்டமன்ற தேர்தலுக்கு 500 நாட்கள் தான் உள்ளது.. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள இப்போதிலிருந்தே நாம் திட்டமிட வேண்டும்.. தயாராக இருக்க வேண்டும். அதற்கு முன்னதாக, வட மாநிலங்களுக்கு சென்று பாஜகவிற்கான வாக்கு சேகரிப்பு பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொள்வது அவசியம்.
வட மாநிலங்களில் தேர்தல் பணிகள், வெற்றிக்கான வியூகம், களத்தில் பணியாற்றுவது உள்ளிட்டவைகளை அங்குள்ள பாஜகவினர் எப்படி கையாள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டால் சட்டமன்ற தேர்தலுக்கு உங்களுக்கு பலனளிக்கும். நாடாளுமன்ற தேர்தலில் எனக்கு கிடைத்த தகவல்களின் படி பூத் கமிட்டி நம்மிடம் பலகீனமாக இருக்கிறது. அதனால், பூத் கமிட்டியை வலிமைப்படுத்த நீங்கள் முயற்சிக்க வேண்டும்" என்று அட்வைஸ் செய்திருக்கிறார் அண்ணாமலை.
பாஜக பொறுப்பாளர்கள்: அதேபோல, பாஜக பொறுப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரிடமும் மீண்டும் ஆலோசனை கூட்டத்தை நடத்தவும் அண்ணாமலை திட்டமிட்டு வருகிறாராம்.
லோக்சபா தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், அதற்குள் அண்ணாமலையின் வேகம் பலரையும் வியப்புக்கு உள்ளாக்கிவருகிறது.. இந்நிலையில், தமிழக பாஜக குறித்த இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது..
இளைஞர்கள்: அதாவது, நடந்து முடிந்த எம்பி தேர்தலில் இளைஞர்கள் பலருக்கு வாய்ப்பு தரவில்லை.., அதேபோல, புதியவர்களுக்கும் வாய்ப்பு தரவில்லை.. முக்கிய பதவியில் இருப்பவர்களுக்கும், சீனியர்களுக்கும், பிரபலங்களுக்குமே இந்த முறையும் தேர்தலில் வாய்ப்பு தரப்பட்டது.. அவ்வளவு ஏன்? மாநில தலைவர் அண்ணாமலையே தான் வேட்பாளராக்கப்படுவோம் என எதிர்பார்க்கவில்லை. போட்டியிடவும் விருப்பமில்லை என்று சொன்னாராம்.. எனினும், கோவையில் களமிறக்கப்பட்டார்
சீனியர்களும், பிரபலங்களும் களமிறங்க காரணம், இந்த முறை தேர்தலில், அதிமுகவுக்கு பதிலடியை தர வேண்டிய நெருக்கடி பாஜகவுக்கு ஏற்பட்டது. மேலும், பாஜகவின் வாக்கு வங்கியையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதைவிட முக்கியமாக திமுகவுக்கு குறிப்பிட்ட சில தொகுதிகளில டஃப் தர வேண்டும் என்ற அவசியமும் ஏறபட்டது.
பாஜக கணக்கு: அதனால்தான், முக்கிய பிரமுகர்களை நிறுத்துவன் மூலம் ஒரு சில இடங்களையாவது கைப்பற்ற முடியும் என்ற தமிழக பாஜக "கணக்கு" போட்டது.. இந்த காரணத்தை அடிப்படையாக வைத்தே, தொகுதிகளில் தாராளத்தையும் காட்டியது.. ஆனால், திட்டமிட்டபடி, பாஜகவின் கணக்குகள் தவிடுபொடியாகிவிட்டதாம்.. அடிமட்ட நிர்வாகிகளுக்கே முறையாக பணம் போய்ச்சேரவில்லையாம்.. சில இடங்களில் உள்குத்தும் வெடித்து கிளம்பி உள்ளதாம்.
அதனால்தான், இதுபோன்ற சிக்கல்கள், வரப்போகும் சட்டசபை தேர்தலில் வரக்கூடாது என்பதற்காக இப்போதே தமிழக பாஜக அலர்ட் ஆகியிருக்கிறதாம்.. முக்கியமாக, சட்டசபை தேர்தலில் அதிக சீட்களில் போட்டியிட முடியும் என்பதால் ஏராளமான இளைஞர்களுக்கும், புதுமுகங்களுக்கும் வாய்ப்பு தர போகிறதாம் தமிழக பாஜக.
அண்ணாமலை: இதுகுறித்து மாநில தலைவர் அண்ணாமலையும், தன்னுடைய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.. அப்போது, "தேர்தல் துவங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பேயே வேட்பாளரை அடையாளம் கண்டு தெரிவிப்பார்கள்.. அவர்கள் தங்களுக்கான தொகுதியில் தீவிர பணியாற்ற வேண்டும்.
முக்கியமாக, 10 வருடம் அனுபவமுள்ள, தொகுதியில் களப்பணியில் தீவிரமாக பணியாற்றி, செல்வாக்கு பெற்றவர்களுக்கே அதிக வாய்ப்பு தரப்படும்... சட்டசபையில் சீட் கிடைக்காவிட்டாலும், அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். அதனால், வெற்றி பெறுவதை இலக்காக வைத்து செயல்பட வேண்டும்" என்றாராம் அண்ணாமலை.
பலே திட்டம்: இந்த எம்பி தேர்தலுக்காகவே, கடந்த 2 வருடங்களுக்கு முன்பேயே, இதற்கான ஆயத்த பணியில் இறங்கியிருந்தார் அண்ணாமலை.. தமிழ்நாட்டிலேயே, மற்ற கட்சிகளைவிட, எம்பி தேர்தலுக்கு முந்திக்கொண்டு ஆர்வம் காட்டியவர் அண்ணாமலைதான்.. அந்தவகையில், மதுரையில் பாஜகவின் முதல் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தி திராவிட கட்சிகளுக்கே டஃப் தந்திருந்தார்..
அந்தவரிசையில், இப்போதும் லோக்சபா தேர்தல் முடிந்த சூட்டோடு, சட்டசபை தேர்தலை சந்திப்பது குறித்து பேச்சினை அண்ணாமலை ஆரம்பித்துள்ளது பலரது கவனத்தையும் பெற்று வருகிறது..
அத்துடன், பாஜகவின் "நம்பிக்கை நட்சத்திரமாக" கருதப்படும் இளைஞர்களுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது, எதிர்க்கட்சிகளின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துவருகிறது. ஏற்கனவே, திமுகவில் நிறைய புதுமுகங்களுக்கு இந்த முறை வாய்ப்பு தரப்பட்டுள்ள னநிலையில், வரப்போகும் தேர்தலிலும் பல வியூகங்கள் இப்போதே ஆரம்பமாகி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications