அள்ளிட்டு போங்க.. விதவிதமா விளம்பரம்.. எஸ்கேப் ஆன பிரணவ் ஜுவல்லர்ஸ்: புகார்களை அடுத்து வழக்குப்பதிவு
மதுரை: பிரணவ் ஜுவல்லரி நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் ஏராளமான தங்கம் மற்றும் பணத்தை முதலீடாக பெற்று மோசடி செய்துள்ளதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார்ர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த பிரணவ் ஜுவல்லரி என்ற நகைக்கடை, மிகக்குறுகிய காலத்திலேயே, மதுரை, சென்னை, கும்பகோணம், கோவை, ஈரோடு, நாகர்கோவில், புதுச்சேரி என பல இடங்களில் தமது கிளைகளை நிறுவியது. 0% செய்கூலி, சேதாரம் என கவர்ச்சிகரமான விளம்பரத்தோடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வந்தது பிரணவ் ஜுவல்லரி.

5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 2% வட்டி வழங்கப்படும். அல்லது, 10 மாதங்களுக்குக்குப் பிறகு செய்கூலி, சேதாரம் இன்றி 106 கிராம் தங்க நகை பெற்றுக்கொள்ளலாம் என பிரணவ் ஜுவல்லரி அதிரடியாக விளம்பரங்களைச் செய்தது. மேலும், 11 மாதம் மாதச்சீட்டு கட்டினால் 12வது மாத தவணையை கம்பெனியே கட்டும் என்றும் பல கவர்ச்சிகரமான அறிவிப்புகளைச் செய்திருந்தது பிரணவ் ஜுவல்லரி.
மேலும், பழைய நகைகளை அடகு கடையில் வைத்து ஏன் வட்டி கட்டுறீங்க? பழைய நகைகளை எங்களிடம் கொண்டு வந்து தாங்க, ஒரு வருடம் கழித்து, எந்த வித செய்கூலி, சேதாரமும் இல்லாமல், பழைய நகையின் எடைக்கு சமமாக புதிய நகைகளை அள்ளிட்டு போங்க என்றும் விளம்பரம் செய்தது பிரணவ் ஜுவல்லரி. இதனால் பெண்கள் மத்தியில் இந்த நிறுவனத்துக்கு ஏகபோக வரவேற்பு ஏற்பட்டது.
ஆயிரக்கணக்கான மக்கள், பிரணவ் ஜுவல்லரியின் பல்வேறு கிளைகளில் பணத்தைக் கட்டினர். பழைய நகைகளை கொடுத்து, ஓராண்டு முடிந்த பிறகு புது நகைகளை அள்ளிச் செல்ல காத்திருந்தனர். ஆனால், பிரணவ் ஜுவல்லரி நகைக்கடை, தங்கள் கிளைகளை அடுத்தடுத்து இழுத்து மூடி வந்தது. திருச்சியில் உள்ள பிரணவ் ஜுவல்லரியும் மூடப்பட்டது.
இதையடுத்து, அதிர்ந்து போன வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். மதுரை, திருச்சி என பல்வேறு இடங்களிலும் நூற்றுக்கணக்கானோர் பிரணவ் ஜுவல்லரி மீது மோசடி புகார் அளித்துள்ளனர். குரோம்பேட்டையில் உள்ள பிரணவ் ஜூவல்லர்ஸ் நகை கடையில் மாத நகை சீட்டு கட்டியவர்கள் 150-க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
பழைய நகைகளை டெபாசிட் செய்தால் ஒரு வருடம் கழித்து அதே எடையுள்ள புதிய நகையை தருவதாகக் கூறிவிட்டு ஒரு வருடம் கழித்து புதிய நகை கேட்ட போது தராமல் காலம் கடத்தி வந்த நிலையில், திடீரென நகைக்கடையை இழுத்து மூடிவிட்டுச் சென்றுள்ளதாக வாடிக்கையாளர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்ததாக மதுரை பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யபட்டுள்ளது. திடீரென நகைக் கடையை மூடிவிட்டு தலைமறைவான கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர், ஊழியர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோசடி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications
