Manickam Tagore: 36 நாட்களாக காத்திருக்கிறோம்! திமுகவை கடுகடுத்த மாணிக்கம் தாகூர்!
மதுரை: "கூட்டணி பேச்சுவார்த்தைக்காக காங்கிரஸ் தலைமை குழு அமைத்தும், திமுக காலம் தாழ்த்துகிறது. நாங்கள் 36 நாட்களாக காத்திருக்கிறோம்," என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திமுகவுடன் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த, காங்கிரஸ் தலைமை கடந்த டிசம்பர் 1-ம் தேதி கிரீஷ் சோடங்கர் தலைமையில் ஒரு குழுவை அமைத்தது. ஆனால், 36 நாட்களாகக் காத்திருக்கும் இந்தக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக இன்னும் தங்கள் குழுவை அமைக்கவில்லை என்று மாணிக்கம் தாகூர் சுட்டிக் காட்டினார்.

மதுரை திருநகரில் எய்ம்ஸ் பணிகளின் நிலவரம் குறித்து செய்தியாளர்களுடன் பேசிய மாணிக்கம் தாகூர், பணிகளை ஆய்வு செய்ய பத்திரிகையாளர்களை எய்ம்ஸ் இயக்குநரிடம் பேசி அழைப்பு விடுத்திருந்தார். அப்போது, ஒப்பந்த நிறுவனம், கட்டுமானப் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும், முடிந்ததும் திறப்பு விழா நடத்தப்படும் என்றும் ஒப்பந்த நிறுவனம் தெரிவித்தது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது முழுமையடையும், ராமநாதபுர மாணவர்கள் எப்போது எய்ம்ஸுக்கு மாற்றப்படுவார்கள் போன்ற கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மதுரையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்தில் பிரதமர் இதற்கு விளக்கம் தர வேண்டும் என்றும் கோரினார்.
அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின் மூலம் பிரதமர் மோடி இந்திய விவசாயிகளை அடகு வைத்துவிட்டதாக மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டினார். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக 500 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்கள் இந்தியாவுக்குள் வெள்ளமெனப் பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.
பட்ஜெட் விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து விரிவாகப் பேச வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கோரினார். விவசாயிகளின் நலன் சார்ந்த இந்த விவகாரத்தை வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மக்களவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதிக்கப்படாததால், மைய மண்டபத்தில் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக எட்டு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து, அவர்களை மீண்டும் பேச அனுமதிக்க வேண்டும் என்றும் மாணிக்கம் தாகூர் வலியுறுத்தினார்.
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என்ற கருத்தை எம்பி மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். கட்சி தலைமை அமைதி காக்குமாறு கூறியும் அவர் திமுகவை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இதனால் அவரை யாரோ இயக்குவதாகவும் குற்றச்சாட்டு எழுகிறது.
திமுகவை விமர்சித்து தினந்தோறும் மாணிக்கம் தாகூர் டிவிட்டரில் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். இது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடுதல் தொகுதி கேட்பதால் திமுகவும் இன்னும் பேச்சுவார்த்தை குழுவை அமைக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications